Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

Saturday, March 5, 2016

கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை

கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என, ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.
கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் கருத்துகளையும் தாங்கள் கேட்கிறோம் என்பதையே இது காண்பிக்கிறது என அவர் மேலும் கூறினார்.

Wednesday, March 2, 2016

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எட்டு கார்கள் வெடித்து சிதறின. அதே பகுதியில் மறைந்திருந்த மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அப்போது, இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஆப்கான் தேசிய போலீஸ் படை வீரர்கள் இணைந்து தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதலில் இந்திய தூதரகம் கடுமையாக சேதம் அடைந்ததாகவும், அதில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப், “ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 

ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தூதரகம் முன்பு வந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். மற்றொருவன் கார்கள் நிறுத்துமிடத்தில் தாக்குதல் நடத்தினான். மற்ற 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையின்போது கொல்லப்பட்டனர்” என்றார்.

சவுதி இராணுவ முகாம் மீது யேமன் இராணுவத்தினர் ஏவுகணைத் தாக்குதல்.

யேமனின் மரிப் மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சவுதி இராணுவ முகாம் மீது யேமனிய இராணுவத்தினர் இன்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் யேமனின் அரபு மொழி அல்- மசீரா இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், மரிப் மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ரடாவீன் சவுதி இராணுவ முகாமை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டளவு சவுதி படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த ஏவுகணைத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த சவுதி படையினரின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், யேமனின் தென்மேற்கு மாகாணமான தைஸின் ஜபல் அல் -முஷாரஃப் பகுதியில் நிலைகொண்டுள்ள சவுதி துருப்புக்கள் மற்றும் அவர்களின் இராணுவ உபகரணங்களை இலக்கு வைத்தும் இன்று யேமனியப் படையினர் மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் மரிப் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சவுதி துருப்புக்களை யேமனிய படையினர் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 1, 2016

பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்கும் இந்தோனேஷிய முயற்சி பலன் தருமா?

பிளாஸ்டிக் கழிவால் இந்தோனேசியாவில் ஆறுகளும், கடல்களும் நிரம்பிவழிவது அந்நாட்டு சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளை பெரிதும் பாதித்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இந்தோனேஷிய அரசாங்கம் தற்போது முயற்சிக்கிறது.
இனிமேல் அங்கு பிளாஸ்டிக் பைகள் வாங்குவதற்கு இருபத்து மூன்று நகரங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய திட்டம் பின்னர் நாடெங்கும் அமல்படுத்தப்படவிருக்கிறது.
இதன் மூலம் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் குறைக்க முடியும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Monday, February 29, 2016

இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர், இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றையை முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். இதன்போது ஐ.நா ஆணையாளர், இலங்கை தொடர்பான விரிவான விளக்கமொன்றை அவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இங்கு தாம் அறிந்த விடயங்கள், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், இதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களையும் முன்வைக்கவுள்ளன.
ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னரான அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக செயற்பட்டு பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா, கடந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பான வகையில் பிரேரணை முன்வைத்ததோடு, அதற்கு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இணை அனுசரணையும் வழங்கியிருந்தன.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 31ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் போர் நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சிரியாவில் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு, இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 5 வருடங்களில், அமைதியான நாளாக, இன்றைய தினம் அமைந்தது. மோதல் தவிர்ப்பின் முதல் நாளான சனிக்கிழமை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதோடு, அரசாங்கத் தரப்பும் சிரியப் போராளிகளும், மற்றைய தரப்பைக் குற்றஞ்சாட்டியிருந்தன. இதுகுறித்து, டமாஸ்கஸ்ஸிலுள்ள மருத்துவபீட மாணவனொருவன் கருத்துத் தெரிவிக்கையில், 'குண்டுகளின் சத்தமின்றி நாங்கள் துயிலெழுந்தது, இது தான் (அண்மைக்காலத்தில்) முதற்தடவையென்று நான் நினைக்கிறேன்" என்றார். இந்த மோதல் தவிர்ப்பைக் கண்காணிப்பதற்காக, ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள குழு, சனிக்கிழமையன்று மோதல் தவிர்ப்பு, பெருமளவில் வெற்றிகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்தது. மோதல் தவிர்ப்பை மீறிய சில சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை, எனினும் அவை, விரைவிலேயே இல்லாது போனதாகத் தெரிவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமையை விட அமைதியான சூழலே காணப்பட்டதாக, அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மோதல் தவிர்ப்பு பின்பற்றப்படுகின்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. றக்கா மாகாணத்திலுள்ள தல் அபியட் நகரில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதோடு, குர்திஷ்கள் தரப்பில் 20 பேரும் பொதுமக்களில் இருவரும் கொல்லப்பட்டனர். அதேபோன்று, சனிக்கிழமை மாத்திரம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழு மீது, அமெரிக்க விமானங்களால் 10 வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, மோதல் தவிர்ப்புக்கு அமைவாக, ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா தவிர்ந்த ஏனைய குழுக்கள் உள்ள பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களை நிறுத்துவதாக, ரஷ்யா அறிவித்துள்ளது.

Sunday, March 16, 2014

தொடரும் மாயம்: விமானம் திட்டமிடப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளது, அனுபவமிக்க விமானிகளால் கடத்தப்பட்டிருக்கலாம், விமானத்திலிருந்து இன்னும் சேட்டிலைட் சிக்னல் வருகிறது

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த 7ஆம் திகதி சென்ற மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.
 
இதுநாள் வரையிலும் விமானம் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.