Saturday, March 5, 2016

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் - மங்கள சமரவீர

நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட   சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஜனநாயக சமூகம் தொடர்பான நிகழ்வொன்றில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 
இலங்கையில் ஜனநாயகம் என்பது நீண்டகாலமாக பயங்கரவாதிகளின் தனிநாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அச்சுறுத்தலுக்குட்பட்டு காணப்பட்டது. அந்த பயங்கரவாதக் குழுவினர் சிறுவர்களை தமது படையில் இணைத்ததுடன், ஜனநாயகத் தலைவர்களையும் கொலை  செய்தனர். ஜனநாயகத்தை சீர்குலைத்தனர். அதனால் தான் ஜனநாயகத்தில் அங்கத்துவம் வகிக்காத பயங்கரவாத தடைச் சட்டத்தைக்கூட நாங்கள் கொண்டுவர நேர்ந்தது. 
பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஆரம்பித்தனர். 30 வருடங்களாக இலங்கையை பயங்கரவாதம் ஆட்கொண்டது. இக் காலத்தில் பல்வேறு அரசாங்கங்களின் தலைவர்கள் சர்வதேச உதவியுடன் பேச்சுவார்த்தைகளினூடாக தீர்வுக்கு செல்ல முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் ஜனநாயகம் மீண்டும் வலுவடையும் என மக்கள் எதிர்பார்த்தனர். யுத்தம் முடிந்ததும்  நல்லிணக்கம் முன்னெடுக்கப்பட்டு யுத்தத்தினால்  ஏற்பட்ட காயங்களை ஆற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் யுத்த வெற்றியைக் மிகப் பாரியளவில்  கொண்டாடியது. 
ஜனாதிபதியாக இரண்டு தடவைகளே  பதவிவகிக்க முடியும் என்பதற்கான  வரையறைகளை அரசியலமைப்பு திருத்தம் மூலம் அப்போதைய அரசாங்கம் நீக்கியது. சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டன, கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது, செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஊடகவியளாலர்கள் அச்சுறுத்தப்பட்டனர், சுயாதீன நீதித்துறை செயலிழந்தது, நடமாடும் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது, மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நாட்டை ஆட்கொண்டது. 
எவ்வாறெனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நிலைமை மாற்றமடைந்தது. முழு உலகத்திற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்  வகையில் ஆசியாவில் மிக பழைய நாடான இலங்கையில் வன்முறையற்ற ரீதியில் சர்வாதிகாரம் நீக்கப்பட்டது. கற்கள், துப்பாக்கி குண்டுகளுக்குப் பதிலாக மக்கள் வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி மாற்றத்தை கொண்டு வந்தனர். 
இந்த வெற்றிக்குப் பக்கபலமாக தேர்தல் ஆணையாளரும் முப்படையினரும் பொலிஸாரும் இருந்தனர். ஜனவரி 8 ஆம் திகதி மட்டுமல்லாது  ஆகஸ்ட் 17 ஆம் திகதியும் அந்த வெற்றி மீள் உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்படும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்படும் வகையிலும் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர்  இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து  கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இது இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியது. மிகவும் மதிக்கத்தக்க மூத்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதிஷ்டவசமாக புலிகள் இன்று இல்லாமையின் காரணமாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வன்முறை  ஒரு காரணமாக இருக்கப்போவதில்லை. சமாதானத்திற்கான விருப்பம் மிகவும் தெ ளிவாக காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதில் தேசிய அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது. 
தற்போதைய இந்த சந்தர்ப்பத்தை  உரிய முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்  செல்ல முயற்சி செய்கிறோம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் போரவையில் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. 
அந்தவகையில் நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச கோட்பாடுகளுக்குட்பட்ட   சட்டமொன்றை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம். 
இலங்கை தற்போது ஜனநாயகமயப்படுத்தலை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் செயற்படுத்துகின்றது. அந்த வகையில் இலங்கையின்  யுத்தத்திற்கு பின்னரான வெற்றிகரமான பயணத்துக்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.