Tuesday, March 1, 2016

உர மானியம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் விவசாயத்திற்கான உர மானியத்தை முன்னர் கொடுத்தது போன்றே வழங்கக்கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தென்பகுதியிலுள்ள அம்பலாந்தோட்டையில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பதுளை, அம்பாறை, அநுராதபுரம் உட்பட பல பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்ற விவசாயிகள், தங்களுக்கான உர மானியத்தை முன்னர் கொடுத்தது போன்று வழங்கக்கோரியும், விவசாயிகள் வங்கிக்கு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கொண்டுரப்பட்டுள்ள விதியை ரத்துச் செய்யுக்கோரியும் கோஷமெழுப்பினர்.
இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கு உர மானியம் முன்னர் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது விவசாயிகளே உரத்தை வாங்குவதற்கு பணத்தை நேரடியாக வழங்கும் ஒரு திட்டத்தை அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்த பணத்தை பெறுவதற்காக விவசாயிகள் வங்கிக்கணக்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையின் புதிய அரசு, நாட்டில் விவசாயத்தை இல்லாதொழிக்கும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, அகில இலங்கை விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிசிரகுமார வஹலதந்திரி கூறினார்.
இதனிடையே விவசாயிகளுக்கு அரசு நல்லதையே செய்துள்ளது என தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அரசுக்கு வேண்டாதவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர் எனக் கூறியிருக்கிறார்.
நன்றி பிபிசி