Monday, March 7, 2016

மகளிர் தினம் 2016 - ஓர் தொகுப்பு

மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.

இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியுமா?  

1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை ஆகியவற்றுக்காக அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவர்கள் பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பெண்களை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன், அவர்களை தன் இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரண்மனை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.

அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரை திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினான். ஆனால், அவனால் வாக்குறுதிப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். 

அந்த மார்ச் 8ம் தேதிதான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக  அமைந்தது. இதேபோல், அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரான நியூயார்க்கில், நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் 

பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.
காப்பிய நாயகிகள்
சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.
பெண்பாற் புலவர்கள்
சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.
இலக்கியத்தில் பெண்ணின் பெருமை
பக்தியை பேசும் இலக்கியத்தில் பெரிய புராணம் முதன்மையானது. 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இருபத்தியொருவர் நாயன்மாரது மனைவியர், தாயார் நால்வர், மகள்மார் இருவர், உடன் பிறப்பு ஒருவர், காரைக்காலம்மை, இசைஞானியார், மங்கயர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த, சிறுத் தொண்டர் மனைவியை "மனையறத்தின் வேராகி" என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார்.. புராணக் கதைகள் கற்பனை என்று சாதித்து வாதிப்பவரும் உண்டு.
வீர மங்கைகள்
சங்க காலத்தில் வீரத்தின் விளை நிலமாகவும் பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் தீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் படித்திருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா? இவையே ஆணின் வெற்றிக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பதை நிரூபித்துள்ளது.
பாரதியும் பெண்ணியமும்
பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார், தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. தொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பறைசாற்றின.

எழுத்தாளர்கள், இசையரசிகள், சொற்பொழிவாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும். நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.