Wednesday, March 2, 2016

சவுதி இராணுவ முகாம் மீது யேமன் இராணுவத்தினர் ஏவுகணைத் தாக்குதல்.

யேமனின் மரிப் மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சவுதி இராணுவ முகாம் மீது யேமனிய இராணுவத்தினர் இன்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் யேமனின் அரபு மொழி அல்- மசீரா இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், மரிப் மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ரடாவீன் சவுதி இராணுவ முகாமை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டளவு சவுதி படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த ஏவுகணைத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த சவுதி படையினரின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், யேமனின் தென்மேற்கு மாகாணமான தைஸின் ஜபல் அல் -முஷாரஃப் பகுதியில் நிலைகொண்டுள்ள சவுதி துருப்புக்கள் மற்றும் அவர்களின் இராணுவ உபகரணங்களை இலக்கு வைத்தும் இன்று யேமனியப் படையினர் மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் மரிப் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சவுதி துருப்புக்களை யேமனிய படையினர் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.