Friday, June 5, 2015

செய்தி: வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்

சவுதிஅரேபியா நாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 20 ஆம் தேதி தென் கொரியா திரும்பிய 60 வயது நபரை மெர்ஸ் நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மூலம் அந்நாட்டில் உள்ள பல்வேறு நபர்களுக்கும் இந்நோய் பரவியுள்ளது. இதில் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேரை இந்நோய் நேரிடையாக தாக்கியுள்ளது.

மேலும் 1300 பேரை இந்நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக தனி வார்டில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்நாடு முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் வேகமாக பரவும் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டும் நேற்று 209 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது மேலும் 491 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் சியோலில் முக கவசம் அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சவுதி அரேபியா நாட்டு மக்களை மர்ம நோய் ஒன்று தாக்கியது. அது புதுவகை கிருமியால் உருவாகியிருந்தது. இந்த நோய்க்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டது. அந்நாட்டில் இந்நோய் தாக்கிய பலர் உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து மெர்ஸ் நோய் மற்ற நாடுகளிலும் பரவியதால் உலகம் முழுவதும் இதுவரை 1161 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 436 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.