Sunday, May 17, 2015

ட்ரோன்கள் பயங்கரவாதிகளின் ஆயுதமாகும் ஆபத்து!

ஆளில்லாமல் பறக்கும் சாதனங்கள் (ட்ரோன்கள்) பல ரகங்களில், அளவுகளில் இப்போது விற்கப்படுகின்றன. ஜப்பானில், அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, கதிரியக்கம் செறிந்த மணலை ஒரு ட்ரோனில் வைத்து கடந்த மாதம் பிரதமர் வீட்டு கூரை மீது இறக்கி நிறுத்திவிட்டார், 40 வயதுக்காரர். சில நாட்கள் கழித்தே போலீசார் அதை கண்டுபிடித்து, அந்த நபரையும் கைது செய்தனர். பிரிட்டனில் ஒரு நபர்,

சிறைக்குள் இருப்பவர்களுக்கு போதை மருந்து, செல்போன், கத்தி போன்றவற்றை சப்ளை செய்ய ட்ரோன் ஒன்றை அனுப்பியதால் கைதானார். ட்ரோன்களால் வீடியோ, புகைப்படம் எடுத்தல், பொழுதுபோக்கு, விஞ்ஞான ஆராய்ச்சி என, பல நல்ல பயன்கள் உண்டு. என்றாலும் தாக்கிவிட்டு சிக்காமல் தப்பிக்க நினைக்கும் பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு ரிமோட் மூலம் ட்ரோன்களை பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் பல நாடுகளில் கிளம்பியுள்ளது.

இதை தடுக்க, உரிய இடத்திற்கு ட்ரோனை செலுத்த உதவும் அதன் ஜி.பி.எஸ்.,சை குழப்பி, நாம் விரும்பும் இடத்திற்கு திருப்புவது, அத்துமீறும் ட்ரோன் எதிர்ப்பு ட்ரோன்களை வைத்திருப்பது, ட்ரோன்களின் ரேடியோ அலைவரிசையை பிசிறடிக்கச் செய்வது (ஆர்.எப். ஜாம்மிங்), வலுவான மின் காந்த அலைத் துடிப்பை செலுத்தி ட்ரோனை செயலிழக்கச் செய்வது போன்ற சில தொழில்நுட்பங்கள் கைவசம் இருக்கின்றன. ஆனால், அத்து மீறி வரும் ட்ரோனை ரேடார் மூலம் தொலைவிலேயே கண்டறிவது சாத்தியமில்லை. ட்ரோன்கள் தாழப் பறப்பதும் மிகச் சிறியவையாக இருப்பதும்தான் அதற்கு காரணம்.