Sunday, February 1, 2015

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜெப் புஷ் போட்டியிட வாய்ப்பு அதிகரிப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் போட்டியிடப் போவதில்லை என வியாழக்கிழமை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெப் புஷ் (61) வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எனினும், குடியரசுக் கட்சி சார்பில் ஏற்கெனவே சிலரின் பெயர்கள் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்திய வம்சாவளி அமெரிக்கரான பாபி ஜிண்டால் அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது. அவர் இப்போது லூயிஸியானா மாகாணத்தின் ஆளுநராக உள்ளார்.
நியூஜெர்சி மாகாண ஆளுநராக உள்ள கிறிஸ் கிறிஸ்டீ அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், தேர்தல் செலவு, ஊடக ஆதரவு, அரசியல் அனுபவப் பின்னணி ஆகிய காரணங்களால் ஜெப் புஷ் அதிபர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு அதிகம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜான் எல்லிஸ் புஷ் என்கிற "ஜெப்' புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர்.
இந்நிலையில், "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மிக விரைவில் அறிவிப்பேன் என்று ஜெப் புஷ் கூறினார்.