Tuesday, December 18, 2012

உள்ளிருக்கும் அற்புதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்

“உண்மையான ஆனந்தம் சாதனைகளைப் பற்றியதல்ல, உங்கள் உள்ளேயே அமைதியைக் கண்டுகொள்வதைப் பற்றியது. கண்டுகொள்வதற்காக உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணம்தான் எல்லா பயணங்களையும் விட மிக சிறந்த பயணம்.”
மகராஜி அவர்கள் தன் சிறுபிராயத்திலிருந்தே மக்களிடம் உள் அமைதியைப் பற்றி உரையாற்றி வருவதுடன் தனது பதிமூன்றாவது வயதில் அவர் சர்வதேச ரீதியில் பிரயாணம் செய்ய தொடங்கினார். அன்றுதொட்டு அவர் உலகெங்குமுள்ள ஆறரைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார். அவரின் உரைகளை பல்வேறு சாதனங்களின் வாயிலாக மலேசியா உட்பட 88-ற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
புதிய கண்டங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கண்டுபிடிப்பாளர்கள் எப்பொழுதும் விண்வெளியை நோக்கியும், சமுத்திரத்தின் அடித்தளத்தை நோக்கியும் செல்கின்றனர். இந்த ஆராய்ச்சிப் பிரயாணங்களில் பங்குபெற முடியாத பலர் கண்டுபிடிப்பதனால் ஏற்படும் கிளர்ச்சியை புத்தகங்களில் இருந்தும், சஞ்சிகைகளில் இருந்தும், மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் பெற்றுகொள்ள விரும்புகின்றனர்.
இன்னும் சிலரோ
சந்திரனுக்குப் போவதைப் பற்றியும் சமுத்திரத்தின் அடித்தளத்திற்கு போவதைப் பற்றியும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுகொள்வதற்கான உண்மையான தேவை எப்பொழுதும் மக்களிடம் இருப்பதை இதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது.

எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் பயனடையக்கூடிய ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி மகராஜி அவர்கள் உலகெங்கும் சென்று உரையாற்றி வருகின்றார். அவர் ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் கண்டுகொள்ளப்படாத ஒரு இடத்தைப் பற்றியும், அங்கே கண்டு கொள்ளப்படுவதற்காகக் காத்திருக்கும் அமைதியைப் பற்றியும் உரையாற்றுகின்றார். மகராஜி தங்கள் உள்ளே அந்த நிரந்தரமான அமைதியை உணர விரும்புகிறவர்களுக்கு செயல்முறையான ஒரு வழியை காண்பித்துகொடுக்கிறார்.


“அமைதி ஒரு புத்தகத்திலோ, ஒரு இடத்திலோ, ஒரு மலை உச்சியிலோ இல்லை, ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ள வேண்டும். மனிதர்கள் என்ற ரீதியில் நமது பிரதான கனவு என்னவாக இருக்கவேண்டும்? நமக்குள்ளே உள்ள அந்த அமைதியை கண்டுகொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்பதேயாகும்,” என மகராஜி கூறுகின்றார்.
இந்த வாழ்வு கண்டுகொள்வதைப் பற்றியது. உங்கள் உயிரைக் கண்டுகொள்வதைப் பற்றியது. உண்மையான ஆனந்தத்தை கண்டுகொள்வதைப் பற்றியது. இதை புரிந்து கொள்வதற்கும், உங்களை நிறைவு செய்து கொள்வதற்கும் உங்களுக்கு தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பமானதுதான் இந்த வாழ்வாகும்.
மக்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.
கேள்வி: என்னைச் சுற்றியுள்ள உலகை ஆராய்வதை நான் மிகவும் விரும்புகின்றேன். வெளியே மிகவும் அழகான விஷயங்கள் இருக்கும்பொழுது நான் எதற்காக என்னுள்ளே கவனத்தை செலுத்த வேண்டும்?
பதில்: மக்கள் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து “அது மிகவும் அழகாக உள்ளது” எனக் கூறுவது இயற்கை. நான் கூறுவது என்னவென்றால் சூரிய அஸ்தமனத்தை விட, சந்திரோதயத்தை விட மற்றும் எல்லா மலைகளையும் விட உங்களால் ஒரு போதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகவும் அழகான ஒரு பொருள் உங்கள் உள்ளே உள்ளது என்றுதான். அதுதான் இந்த வாழ்வு.
இந்த வாழ்வின் கதை உங்களிடமிருந்து ஆரம்பித்து, உங்களுடனேயே முடிவடையும். நீங்கள் செல்லும் இப்பாதையில் வேறு எவரும் வரப் போவதில்லை. இந்தப் பயணத்தில் நீங்கள் தான் ஒரே பிரயாணி. இதன் ஆனந்தத்தையும் அழகையும் நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.
கேள்வி: எனக்குள்ளே கவனத்தை செலுத்தும் பிரயாணம் அழகானது என நீங்கள் விளக்குகின்றீர்கள். நான் கற்பனை செய்ததோ அமைதியை உணர்வது ஒரு விதத்தில் மனசலிப்பை ஏற்படுத்தும், ஆனந்தத்தை அளிக்காது என்றுதான். நான் எப்பொழுதும் குதூகலமாக இருக்கவே விரும்புகிறேன்.
பதில்: உங்களுக்கு குதூகலமாக இருக்கவா விருப்பம்? டிஸ்கோ தாளத்திற்கு நீங்கள் நடனமாட விரும்புகின்றீர்களா? டிஸ்கோவானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைந்துவிடும். ஒருபோதும் முடிவடையாத, இரவும் பகலும், ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும், ஒரு வாரத்தில் ஏழு நாட்களும், ஒரு வருடத்தில் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் அரங்கேறிக்கொண்டிருக்கும் டிஸ்கோ ஒன்று உங்களுக்குள்ளே உள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திலும் அது அங்கே இருக்கிறது. மழைபெய்யும் போதும், இடி இடிக்கும்போதும், மின்னல் மின்னும் போதும், வெள்ளப் பெருக்கின்போதும், அல்லது நில நடுக்கத்தின் போதும் அந்த இசையானது இசைப்பதை நிறுத்துவதில்லை. உங்களுக்கு உண்மையான குதூகலம் தேவையாயின் உங்கள் உள்ளத்துடன் நடனமாடத் தொடங்குங்கள். அதுதான் உண்மையான குதூகலம்.
கேள்வி: “உங்களையே நீங்கள் அறிந்துகொள்வது சாத்தியம்” என்று கூறும்போது நீங்கள் எதை குறிப்பிட்டு கூறுகிறீர்கள்?
பதில்: நான் தய்வானில் இருந்தபோது ஒரு புத்தகத்தை படித்தேன். அதில் “உங்கள் நண்பர்களைப் புரிந்துகொள்வது மிகவும் புத்திசாலித்தனமாகும், ஆனால், உங்களையே அறிந்துகொள்வது விவேகமாகும்,” என எழுதப்பட்டிருந்தது.
உண்மையிலேயே நீங்கள் நினைப்பதைவிட மேலும் ஒன்று உங்கள் உள்ளே இருக்கிறது. இன்னமும் திறக்கப்படாத ஒரு பக்கம் உங்கள் உள்ளத்தின் உள்ளே இருக்கலாம், இன்னும் கண்டுபிடிக்கப்படாத சுரங்கம் ஒன்று அங்கே இருக்கலாம். இந்த மாளிகையில் நீங்கள் பார்க்காத இன்னுமொரு அறை அங்கே இருக்கலாம்,
எனவே, உங்களையே நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த உயிர் வாழ்வை கண்டு கொள்வதிலிருந்துதான் அது ஆரம்பிக்கவேண்டும், உங்கள் உள்ளத்தை கண்டுகொள்வதிலிருந்துதான் அது ஆரம்பிக்கவேண்டும். அனைத்தையும் அறிந்துகொண்டால் மட்டுமே ஞானம் கிடைக்குமென மக்கள் எண்ணுகிறார்கள். அது தவறான எண்ணமாகும். உங்களையே நீங்கள் அறிந்துகொள்வதே ஞானமாகும். அதுதான் மெய்ஞானம் என்பதாகும்.