பேச்சு, முக பாவம் ஆகியவற்றை கொண்டே ஒருவரது உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை பின்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனிதனின் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் பின்லாந்தின் அவுலு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேடி பிடிகெய்னன், ஜுகா ரோனிங் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இவர்களது ஆராய்ச்சி தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இதுபற்றி மேடி கூறுகையில், மனிதனின் பேச்சு, முக பாவம், குரல் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை கொண்டே அவரது உணர்ச்சியை இந்த ரோபோ துல்லியமாக தெரிந்துகொண்டு விடும்.
வழக்கமான வீடியோ கமெரா, மனிதனின் முகம் மற்றும் வாய் அசைவுகள், நெற்றி சுருக்கம் ஆகியவற்றை துல்லியமாக பதிவு செய்யும் கைனட் டெப்த் கமெரா, சத்தங்களை பதிவு செய்யும் மைக்ரோபோன், பிரத்யேக மென்பொருள், பிராசசர் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ரோபோ செயல்படுகிறது.
எதிராளியின் மனோபாவத்துக்கு ஏற்ப ரோபோவும் தன் முகத்தை மாற்றிக் கொள்ளும். நோயாளிகளின் முக மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பது, குற்ற விசாரணைகள் போன்ற பணிகளில் இந்த வகை ரோபோக்கள் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சீன பல்கலைக்கழகம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆராய்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.