Tuesday, July 31, 2012

உலக அழிவு- மிக அபத்தமானது-விவாதம் தொடங்குகிறது

"பலகோணங்களில் ஆராயப்படும் இந்  நிகழ்வுக்கு முதற் படியாக இக் கட்டுரை அமைகிறது "
நம் முன்னே இருக்கும் தவிர்க்க இயலாத அபாயம் சூரியன் முழுமையாக எரிந்துபோவது மட்டுமே
தலைவர் பி.ஆர்.எல். கவுன்சில் & முன்னாள் தலைவர், இஸ்ரோ
ஜோதிடர்கள், கிளி ஜோதிடர்கள் மற்றும் போலி விஞ்ஞானிகள் ஆகியோர் டிசம்பர் 21-ம் தேதி உலகம் கடுமையான அழிவைச் சந்திக்கும் என கணித்துள்ளனர்.
மீசோ அமெரிக்கன் ஆண்டு சுற்று 5125-ன் இறுதி நாளாக இந்த தினம் வருகிறது. கருந்துளை, விண் கற்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் தாக்குதலால் உலகம் அழியும் என அவர்கள் கூறுகிறார்கள். இதுபோல எத்தனையோ முறை இப்படியான கணிப்புகள் உலகைப் பீதியூட்டியுள்ளன. ஆனால் அவை பலித்ததில்லை.
எந்தக் கருந்துளையும் சூரியனோடு மோதினாலோ அல்லது சூரியனைக் கடந்தாலோகூட மொத்த  கோள் குடும்பமும்  ஸ்தம்பித்துவிடும். இதில் பூமியும் அடங்கும். இருப்பினும் நமது சூரியன் பால்வெளித்திறன் வளையத்தின் ஒரு பகுதியில் அமைந் துள்ளது. அருகில் உள்ள கருந்துளையே சூரியனிடமிருந்து  28 ஆயிரம் ஒளி ஆண்டுகள் (ஒளி ஆண்டு ~ 9500 பில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கிறது. இதனால் சூரியன் கருந்துளையோடு மோதும் சாத்தியம் அறவே இல்லை.
இருப்பினும் விண் கற்கள், விண்மீன்கள் அல்லது பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்கள் பூமியை மோதுவதற்கும் வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. அப்படியான நிகழ்ச்சி ஏதாவது நடந்துள்ளதா என்று பின்னோக்கிப் பார்த்தால் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது. இதில் பூமியில் உள்ள 60 சதவிகிதம் உயிர்கள் காலியாயின. அவற்றில் டினோசர்களும் அடங்கும்.
உலகம் முழுவதும் உள்ள வான்வெளி விஞ்ஞான அமைப்புகளும், விஞ்ஞானிகளும் நடத்திய ஆய்வில் இதுபோன்ற தாக்குதல்களால் பூமியில் குறைந்தபட்ச பாதிப்பே இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. டினோசர் உள்ளிட்ட உயிரினங்களை அழித்த நிகழ்வுபோல பேரழிவு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையே உள்ளது. 1-6 கிமீ வரை விட்டம் உடைய வான்பொருட்கள் தாக்குவதற்கு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாய்ப்பு உள்ளது. இந்தத் தாக்குதலால் சிறிய அளவிலான பாதிப்பே இருக்கும்.
பூமிக்கு அருகில் உள்ள அளவில் பெரிய வான் பொருட்களால் உருவாகும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும், கணிக்கவும் சர்வதேசரீதியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்படியான வான்பொருட்கள் 1100-ல் 80 சதவிகித பொருட்களின் இயல்பை முழுமையாக விஞ்ஞானிகள் வரையறுத்துவிட்டனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிச்ச 20 சதவிகிதம் பொருட்களின் இயல்பு தாக்கத்தையும் வரையறுத்துவிட முடியும்.
140 மீட்டர் முதல் ஒரு கி.மீ வரை விட்டம் உள்ள பூமிக்கு அருகில் உள்ள வான் பொருட்கள் குறித்த விவரங்கள் கொஞ்சம் சேதங்களை அவை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கின்றன. அவற்றின் குணாதிசயங்களும் 2020க்குள் வரையறுக்கப்பட்டுவிடும். இந்த வான் பொருட்களை கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து சர்வதேச சிறு கிரக மையத்திற்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது கேம்ப்ரிட்ஜில் உள்ளது. இந்த அமைப்புதான் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வான் பொருட்களின் நிலைமைகளை கண் காணிக்கிறது.
இத்துடன் வான்வெளி விஞ்ஞானிகள் வான்பொருட்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும்போது அந்தப் பொருட்களையே பூமியைத் தாக்கும் முன்பே சிதறடித்து விடக்கூடிய முறைகளையும் உருவாக்கி யுள்ளனர். அணு ஆயுதம் அல்லது வேறு தாக்குதல் முறைகள் வழியாக அந்த ஆபத்தை அவர்கள் தவிர்த்துவிடக்கூடிய நிலைமைதான் தற்போது உள்ளது.
நம்முன் உள்ள ஒரே தவிர்க்கஇயலாத அபாயம் என்னவெனில் சூரியன்,  தனது எரிபொருள் அனைத்தையும் இழந்து தீர்ந்துபோவதுதான். இருப்பினும் சூரியன் தொடர்பாக நடத்திய விரிவான ஆய்வுகளின்படி, அது 5000 மில்லியன் ஆண்டுகளுக்கு சுடர்ந்து  ஒளிவிட்டுக் கொண்டு தான் இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. அதனால் தற்போதைக்கு நமது உலகமோ கோள் குடும்பமோ எந்த வகையான அழிவு நிலையையும் சந்திக்கும் வாய்ப்பே இல்லை என்றே சொல்லிவிடலாம். அதற்கு இன்னும் நீண்டகாலம் நாம் காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் உலக அழிவு பற்றி வரும் அபத்தமான கணிப்புகளை மக்கள் நம்புவது துயரமானது. இதுபோன்ற கணிப்புகளுக்கு முழுமையாக விஞ்ஞான அடிப்படையே இல்லை. உலக அழிவு நாள் அல்லது பிரளயம் டிசம்பர் 21-ம் தேதி ஏற்படலாம் என்பதும், இதனால் உலகம் அழியும் என்பதும் முழுமையாக பொய்யானது, ஆதார மற்றது, முட்டாள்தனமானது.