Wednesday, November 9, 2011

வெளிநாட்டவர்களைக் கவர ஜப்பான் வழங்கும் இலவச விமானப் பயணச்சீட்டுக்கள்!

ஜப்பான் நாட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், அடுத்தாண்டு 10,000 பேருக்கு இலவச விமானப் பயணச் சீட்டுக்களை வழங்க அந்நாட்டின் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
ஜப்பானுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் சுற்றுலாவும் ஒன்று.
 ஆனால் கடந்த மார்ச் மாதம் நடந்த சுனாமித் தாக்குதல், புகுக்ஷிமா அணு உலை வெடிப்பு உள்ளிட்டவற்றால் அணுக்கதிர்வீச்சு அச்சத்தால் அந்நாட்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு 32 சதவீத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க புதிய திட்டங்களை வகுத்து வருகின்றது. அந்த வகையில் அடுத்தாண்டு ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளில் 10,000 பேருக்கு இலவச விமானப் பயணச் சீட்டுக்களை வழங்க உள்ளது.
இத்திட்டம் குறித்த மசோதா அந்நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் இணையத்தளம் ஊடாக வெளியிடப்படும்.  இந்த திட்டத்திற்கு அடுத்த மார்ச் மாதம் நடக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.