Tuesday, November 15, 2011

நோக்கியா லுமியா - 800 அறிமுகம் i-Phone 4sஇக்கு சவாலாக அமையுமா !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது. அந்த வகையில், ஒக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆனால் சில மாற்றங்களும் இதில் உள்ளன. என்9, ஆண்ட்ராய்ட் கேலக்ஸி நெக்ஸஸ், ஐ போன் 4எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், லூமியா 800 சற்று கூடுதல் வேகம் கொண்ட ப்ராசசரைக் கொண்டுள்ளது.
ஆனால், மற்றவற்றில் சிறிது பின்தங்கியே உள்ளது. ஐபோன் 4எஸ் -3.5 அங்குலம், என்9-3.7 அங்குலம் என்றபடி அமைக்கப்பட்டிருக்கையில், இதன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே திரை 3.7 அங்குலம் அகலத்தில் உள்ளது.
கேலக்ஸி நெக்ஸஸ் திரை 4.65 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. திரையின் ரெசல்யூசன் 800 x 480 என்ற படி மற்றவற்றிடமிருந்து குறைவானதாகவே உள்ளது. இதன் தடிமனும் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாக 12.1 மிமீ அளவில் அமைந்துள்ளது.
இதன் மொத்த பரிமாணம் 117 x 61 x 12 மிமீ. இதன் எடை 142 கிராம். லூமியாவின் ப்ராசசர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் ராம் நினைவகம் 512 எம்பி. உள் நினைவகம் விரிவுபடுத்த முடியாத 16ஜிபி அளவிலானது.


மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் இதில் இல்லை. இதன் கமரா 8 எம்பி திறனுடன், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக இதில் கமரா இல்லை. ஆண்ட்ராய்ட் இயக்கம் இல்லாத, ஐ- போன் அல்லாத, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் தேடுபவர்களுக்கு, நோக்கியாவின் லூமியா 800 ஒரு நல்ல போனாக இருக்கும்.
இதன் விண்டோஸ் மாங்கோ, இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் புதிய அனுபவத்தினைத் தரும் என்பது உறுதி. பதியப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஸ்கை ட்ரைவில் 25 ஜிபி டேட்டா பதிய அனுமதி எக்ஸ் பாக்ஸ் லைவ் இணைவு, மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், 1450 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இன்னும் சில சிறப்புகளாகும்.
கருப்பு, சியான் மற்றும் மெஜந்தா வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கும். மேலே குறிக்கப்பட்டுள்ள அனைத்து திறன்களிலும் சற்று குறைவாகத்திறன் கொண்டதாக லூமியா 710 என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.