வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 1500 இலங்கையர்களுக்கு 15ம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.இந்த ஆண்டு பூர்த்தியாவதற்கு முன்னதாக 18000 வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.இரட்டைக் குடியுரிமை வழங்கும் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தியாகியுள்ளன.
மூன்றாம் கட்டத்தின் அடிப்படையில் இந்த மாதம் 15ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1500 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களாவர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருந்தது.எமது அரசாங்கம் இந்த அநீதியை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது என அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.