பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது சட்டரீதியில் சரியானதா – அவ்வாறெனில் நிரூபிக்க முடியுமா? என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே சம்பந்தன் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
"பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு நீங்கள் கட்டுப்பட்டுள்ளீர்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தொடர்ந்தும் அவ்வாறே வைத்திருப்பது, சட்டபூர்வமானதாகவோ மனிதாபிமான ரீதியானதாகவோ சரியானதென உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளீர்கள். 1971, 1988, 1989 ஆகிய காலங்களில் இத்தகைய கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தற்காலத்தில் இத்தகைய கைதிகள் தொடர்பில் ஏன் பாகுபாடு காட்டுகின்றீர்கள்? இந்த நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும்?" என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.