பிரிட்டிஷ் வங்கியான பார்க்லேஸ், ஆப்பிரிக்காவில் தனது நடவடிக்கைகளை விற்றுவிட முடிவுசெய்திருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டில் அந்த வங்கியின் பங்குகளின் விலை பாதிக்கும் கீழ் குறைந்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவை பார்க்லேஸ் எடுத்திருக்கிறது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பார்க்லேஸ் ஆஃப்ரிக்கா வங்கியில் தனக்கு இருக்கும் 62 சதவீத பங்கை படிப்படியாக குறைத்துக்கொள்ளப் போவதாக பார்க்லேஸ் தெரிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்திருப்பதும் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு குறைந்திருப்பதும் பார்க்லேஸின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
பங்குகள் கைமாறுவதால் தன் நடவடிக்கைகள் மாறாது என பார்க்லேஸ் ஆஃப்ரிக்கா தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 12 நாடுகளில் சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் வாடிக்கையாளர்களை இந்த வங்கி வைத்திருக்கிறது.