Friday, March 4, 2016

ஐ நா தீர்மானத்தின் எதிரொலி வடகொரியா ஏவுகணை வீச்சு

வடகொரியா மீது மிகக்கடுமையான தடைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விதித்து சில மணிநேரங்களில், வடகொரியா, தனது கிழக்குக் கடலோரத்திலிருந்து குறுந்தூர எறிகணைகளைக் கடலுக்குள் ஏவியது. ஐ.நா தீர்மானத்துக்குப் பதிலடி வழங்கும் முகமாகவே இந்த எறிகணைகள் ஏவப்பட்டதாகக் கருதப்படுகிறது. 100 தொடக்கம் 150 கிலோமீற்றர் எறிபரப்புடைய 6 எறிகணைகள், கடலுக்குள் ஏவப்பட்டதாக, தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்தது. இவை, இலங்கை நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஏவப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் பேச்சாளர், கடலுக்குள் ஏவப்பட்டவை ஏவுகணைகளா றொக்கெட்டுகளா என்பதை, அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். அத்தோடு, வடகொரியாவினால் மேற்கொள்ளப்படக்கூடிய ஏனைய நடவடிக்கைகள் குறித்துக் கூர்மையான அவதானித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா மீதோ அல்லது சர்வதேச சமூகத்தின் மீதோ எதிர்ப்புகளை வெளியிடுவதற்கு, ஏவுகணைகளையோ அல்லது றொக்கெட்களையோ ஏவுவது, வடகொரியாவின் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.