Tuesday, June 23, 2015

வை பை சார்ஜ் விரைவில்


'வை-பை' இணையதளம் வழியாக செல்போனை 'சார்ஜ்' செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி 'வை-பை' இணையதளம் மூலம் செல்போன்களை 'சார்ஜ்' செய்யும்   ‘power over WiFi’  என்ற நவீன தொழில்நுட்பத்தை இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக வை-பை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ அலைவரிசை சக்தியை, பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக மாற்றுவதன் மூலம் செல்போனுக்கு சார்ஜை ஏற்றுகிறது.

ஆனால், தற்போதுள்ள வை-பை தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் தேவை.

ஒரு ரூட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரத்தை 'அவுட் புட்' ஆக எடுக்க முடியும் என்பதைக் கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே காமிராவில் 17 அடி தூரத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் டெம்பரேச்சர் சென்சார்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது.

அதேநேரத்தில், சார்ஜ் ஏறும்போது வை-பை இணையதள வேகத்திலும் எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகு விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தை அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்துவருகிறார்கள்.