Saturday, May 30, 2015

இரண்டு லட்சம் கடல்வாழ் நுண்ணுயிரி வகைகள் கண்டுபிடிப்பு

கடலில் மிதந்து கொண்டிருக்கும், மிகவும் சிறிய நுண்ணுயிரியான, பிளாங்டான் பற்றி இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் இரண்டு லட்சம் வகையான, வித்தியாசமான உயிரியினங்களை இனங்கண்டுள்ளதாகவும் அவற்றில் ஏராளமானவை அறிவியல் துறைக்கு புதிதானவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த உயிரினங்களின் மரபணுத் தொடரை வரிசைப்படுத்தும்போது அவற்றில் வைரஸ், பக்டீரியா, ஒருகலத் தாவரம், மற்றும் நுண்ணுயிரி ஆகியவற்றுடன் மில்லியன் கணக்கிலான புதிய மரபணுக்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இவை குறித்த கட்டுரையை ஜர்ணல் சயன்ஸ் எனும் அறிவியல் பத்திரிகையில் ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.
கடல் வாழ் உயிரினங்களில் 90 விழுக்காடுகளாக காணப்படும் பிளாங்டான்கள் குறித்த ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிவியல் சஞ்சிகையில் எழுதியுள்ள ஆய்வாளர்கள் உலகளவில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் சம நிலைக்கு எந்த அளவுக்கு மழைக்காடுகள் முக்கியமானதோ அதே அளவுக்கு இந்தப் பிளாங்டானும் முக்கியமானவை என்று கூறியுள்ளனர்.
அதேவேளை இந்த நுண்ணுயிரிகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையில் இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.