Monday, February 9, 2015

சம்பிக்கவின் கருத்து மகிழ்ச்சியளிக்கின்றது: மைத்திரி, ரணில் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்: த.தே.கூ.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் வடக்கில் கையகப்படுத்திய  காணிகளை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கூறப்பட்ட கூற்றினை தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றிருப்பதாக தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவான் விஜேயவர்த்தன கூறிய கூற்று கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் நல்லாட்சியை உறுதிப்படுத்தியிருப்பதாக நம்பிக்கை கொள்ள முடியும் என்று தெரிவித்த உறுப்பினர் செல்வராசா சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொன் செல்வராசா எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இந்நாட்டில் நல்லாட்சியொன்றை நாம் எதிர்பார்த்தோம். அதற்காகவே வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்தோம். மட்டக்களப்பில் மாத்திரம் ஜனாதிபதிக்கு 87 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விஞ்ஞாபனத்தில் நல்ல விடயங்களையே கூறியுள்ளார். குறிப்பாக அவரால் அத்தியாவசிய பொருட்கள் 10 இனது விலைகளைக் குறைப்பதாக கூறப்பட்டிருந்தது. எனினும் தற்போது 10 க்கும் மேற்பட்ட வகையில்  13 வகையான பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே அவர் நல்லாட்சியே செய்து வருகிறார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சரியானதை சரியென்றதும் தவறானதைத் தவறென்றும் கூறி வந்திருக்கின்றது. பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
இதேவேளை தவறுகளையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவும் 3500 ரூபாவால்  அதிகரிப்பதாக கூறியிருக்கின்ற போதிலும் தற்போது 1000 ரூபாவால்  மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் கூறப்பட்டதான 5000 ரூபா அதிகரிப்பானது சொன்னபடி இடம்பெறவில்லை. மாறாக முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 3000 ரூபா அதிகரிப்புடன் மேலும் 2000 ரூபாவையே அதிகரித்திருபப்தாகவும் தெரிய வருகின்றது. நல்லாட்சி எனும் போது வாக்குறுதிகள் மீறப்படாது அவை நிறைவேற்றப்பட வேண்டும்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன வடக்கு விவகாரம் தொடர்பில் பேசுகையில்
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் எதுவும் புதிதாக முளைப்பதற்கு இடமளிக்க முடியாது எனக் கூறியிருந்தார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் வடக்கு சென்றிருந்த போது வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றும் செயற்பாடுகளோ அல்லது இராணுவ  முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளோ இடம்பெறமாட்டாது எனக் கூறியிருந்தார்.
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு விதமான இணக்க நிலைமைகளுக்கு வருகின்ற நிலையில் மேற்படி பிரதியமைச்சரின் கருத்தானது தமிழ் மக்களின் மனங்களில் ஒருவித கசப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் பொலிஸாருக்கு உரிய அதிகாரங்கள் தற்போது இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டமானது முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டது என்கின்ற போதிலும் அதனை  புதிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. இத்திட்டத்தை புதிய அரசாங்கம் தவிர்த்திருந்தால் தமிழ் பேசும் மக்களை மேலும் ???? முடியும். இவ்விடயத்தை நாம் மக்களிடத்தில் எடுத்துக் கூறும் போது அங்கு கவலைகரமான நிலைமைகளையே சந்திக்க நேரும் என்பதைக் கூற விரும்புகிறேன்.
இதேவேளை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்தானது தமிழ் மக்களின் மனங்களைக் குளிர வைத்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது தமிழ்  மக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட வந்த ஜாதிக்க  ஹெல உறுமய நல்லாட்சியுடன் இணைந்ததுடன் அக்கட்சியினரின் மனங்களும் மாறியிருக்கின்றன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் வடக்கில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீண்டும் உரிய மக்களிடம் கையளிக்க வேண்டும் என  அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கூறப்பட்ட கூற்றினை தமிழ் மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்களின் மனங்களை வென்றுள்ள சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை வரவேற்கின்றது.
நாம் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்த போது தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் குறித்து ஆராயப்பட்ட போது அவர்களது விடுதலை தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேற்படி இருவரும் பச்சைக்கொடி  காட்டியுள்ளனர். எனவே தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் உறவை வளர்த்துக் கொள்வதற்கு இது நல்ல தருணமாக அமைந்துள்ளது என்றார்.