Thursday, February 5, 2015

உன் தகுதியை உலகுக்கு நீயே உரக்கச் சொல்: சீசரின் மந்திரச் சொல்

ஜூலியஸ் சீசர் ஒருமுறை கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமாக சென்றபோது எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் 20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபரை விடுதலை செய்கிறோம் என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பியுள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட சீசர், என் விலை வெறும் 20 தங்கக் காசுகள் தானா?! என கோபமடைந்து எனது விலையாக 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள் என்று தோரனையோடு தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க தொடங்கியுள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த சீசர், உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும் என்று கூறியுள்ளார்.
அப்போது சக பயணி ஒருவர் சீசரிடம், ஏன் இப்படி உன்னை நீயே உயர்வாகப் பேசுகிறாய்? அது உனக்கே ஆபத்தாக முடியலாம் என்று எச்சரித்துள்ளார்.
அதற்கு, நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள் என்று பதிலளித்தார் சீஸர்.
பின்னர், 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், படையை திரட்டிக்கொண்டு சென்று கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு அந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார்.
இதனை பார்த்த பலர், ஏன் இப்படி சுய தம்பட்டம் அடித்து கொள்கிறாய் என்று வினவியபோது, ‘உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காகக் காத்திருக்காதே’ என கூறியுள்ளார்.
ரோம் நகரின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாகச் செயல்படத் தொடங்கிய ஜூலியஸ் சீஸர், மிகப்பெரும் செலவில் பிரமாண்டமான திடல் அமைத்து, ‘அடிமைகளின் மரண விளையாட்டு’ நடத்தி உலக மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.
அது மட்டுமல்லாமல், ரோமன் காலண்டரை மாற்றியமைத்ததோடு நகெரங்கும் சீஸரின் சிலைகள் நிறுவப்பட்டது, நாணயங்களில் அவரது உருவம் பொறிக்கப்பட்டது.
தன் புகழ் இந்த பூமி உள்ள வரை நிலைக்க வேண்டும் என்பதற்காக, பெரும் செலவுகள் செய்த சீஸரை இனியும் விட்டுவைத்தால், ரோம் சீரழிந்துவிடும் என அவருக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரே கொல்லத் துணிந்தனர்.
மேலும், எல்லோரும் அவரை கத்தியால் குத்த, மகன் போல் தான் நினைத்திருந்த புரூட்டஸிடம் சீசர் ஓடினார். ஆனால் அவனும் கத்தியெடுத்துக் குத்தேவ, ‘‘நீயுமா புரூட்டஸ்?’’ என்று பதறித் துடித்தபடி உயிரைவிட்டார் சீசர்.