Thursday, November 28, 2013

அரிய வகை டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை.

(BBC/TAMIL) பூமியில்150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலவிய டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு ஆறு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.இங்கிலாந்திலுள்ள பில்லிங்ஸ்ஹர்ஸ்ட் நகரில் இன்று மதியம் இந்த ஏலம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட முழுமையாக இருக்கும் இந்த டிப்லோடோகஸ் வகை டைனோசரின் புதைபடிவ எலும்புக்கூட்டில் அதன் நீண்ட கழுத்தும், சாட்டைப் போன்ற வாலும் காணப்படுகின்றன.
ஏலம் போகவுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு தலை முதல் வால்வரை 17 மீட்டர்கள் நீளம் கொண்டது.

இந்த எலும்புக்கூடு ஐந்து லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் போகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மிஸ்ட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் எந்த பெண் டைனோசரின் எலும்புக்கூடு, அமெரிக்காவின் வயோமிங் பிரதேசத்தில் ஒரு கல்லுடைக்கும் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஒரு தனியார் நிலத்தில் அந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால் அதை ஏலத்துக்காக பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
வயோமிங் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூட்டின் பகுதிகள் பின்னர் ராட்டர்டாம் நகரில் ஒன்றிணைக்கப்பட்டன.
இந்த வகை டைனோசரின் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஆறு மட்டுமே உலகளவில் உள்ளன.