Thursday, November 10, 2011

'மார்ஸ்500' : செவ்வாய் செல்லும் பயிற்சியில் 500 நாட்கள்



'மார்ஸ்500' குழுவினர்
'மார்ஸ்500' குழுவினர்

செவ்வாய் கிரக பயண ஏற்பாடுகளுக்காக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் குடுவையொன்றுக்குள் 500 நாட்களுக்கும் அதிககாலம் பூரண வெளித் தொடர்புகளற்று பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆறுபேரும் சிரித்தபடி கூட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்திருக்கின்றனர்.
செவ்வாய்கிரக பயணத்தின் போது, எதிர்கொள்ளக்கூடிய சோர்வு, மன அழுத்தங்கள் போன்ற அனுபவங்களை பரிசோதித்துப் பார்ப்பதற்காக ரஷ்யா, ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு உலோகக் குடுவைக்குள் இத்தனை காலமும் தங்கியிருந்துள்ளது.
‘மிக தொலைதூரத்தில் உள்ள, ஆனால் சென்று சேரக்கூடிய கிரகமொன்றில் மனித வர்க்கம் ஒருநாள் விடியலைக் காண்பதற்கு செல்லவுள்ள பயணத்துக்கு இந்த பயிற்சி உதவும்’ என்று நம்புவதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த டியாகோ உர்பினா தெரிவித்தார்.
வழமையான வாழ்க்கை முறையால் சோர்வடைந்து போனமையே முக்கிய சவாலாக தமக்கு இருந்ததாக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு நீண்ட காலத்துக்கு தொடர்ந்து விண்வெளி பயணத்தில் இருக்கின்றபோது சீதோஷ்ண மாற்றங்களின் போதும், அழுத்தங்களின் போதும் மனித உடல் எவ்வாறு அவற்றை எதிர்கொள்ளும் என்பதை பரிசோதிப்பதற்காக விஞ்ஞானிகள் இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மாதிரி செவ்வாய்க் கிரகமொன்றை உருவாக்கி அங்கு மூன்று பேர் இறங்குவது போலவும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மனித வர்க்கத்தின் நீண்டகால விண்வெளி பயண முயற்சியொன்றுக்கான பயிற்சியில் இந்த ஆறு விஞ்ஞானிகளும் 520 நாட்களை பூர்த்தி செய்துவிட்டு வந்துள்ளனர் என்று ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளியுலகுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகள் மட்டும் தான் இந்த 6 பேருக்கும் இருந்துவந்துள்ளது. அவர்களின் விண்ணோடத்தில் யன்னல்கள் இருக்கவில்லை. பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் இடையில் மிக தொலைவில் இருக்கும் போது இவர்களுக்கு எவ்வாறான தொடர்புகள் இருந்திருக்கும் என்று அதேயளவான தொடர்பாடல் முறைகளுடனேயே இவர்கள் கடந்த 520 நாட்களையும் கழித்துள்ளனர்.

நன்றி - பிபிசி தமிழ்