Wednesday, November 16, 2011

இணையத்தளங்களினால் 15 ஆண்டுகளில் 12 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

உலக அளவில், கடந்த 15 ஆண்டுகளில் இணையதளப் பயன்பாட்டால் 12 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என சர்வதேச நிர்வாக ஆலோசனை சேவை நிறுவனமான மெக்கின்சே தெரிவித்துள்ளது.
மக்களின் வாழ்க்கை முறை, அலுவலகப் பணிகள், நிர்வாகம் போன்றவற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இணையதளம் வாயிலாக ஏற்படும் வேலை இழப்பைக் காட்டிலும், அதிகமாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

இணையதளம் தோன்றிய பிறகு இதன் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. மென்பொருள் தொழில் நுட்பிவயலாளர்கள், இணைய வர்த்தகர்கள் போன்றோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இணையத் தளத்தால் பல்வேறு துறைகளிலும் மறைமுகமாக ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வருகிறது. இதனால் தொலைபேசி மையங்கள் அதிக அளவில் உருவாகி வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
சென்ற 15 ஆண்டுகளில் 12 இலட்சம் பேருக்கு இதனால் வேலை கிடைத்துள்ள நிலையில், மனித உழைப்பிற்கான தேவைப்பாடு குறைந்ததையடுத்து, 5 இலட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக, இதனால் இரண்டு பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலையில், 5 பேருக்கு வேலை கிடைக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் இணையதளம் ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறது.
இந்நிறுவனம் இணையத்தளம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து 13 நாடுகளில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. இவற்றுள் மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட இந்தியாவும் சீனாவும் இருந்தன. இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இணையதளம் ஒட்டுமொத்த அளவில் 3.4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகில் தற்போது 200 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 கோடி என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியா விலும், சீனாவிலும் புதிதாக இணையத்தள இணைப்புகளை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அபார வளர்ச்சி கண்டு வருகிறது. இரண்டு நாடுகளிலும் புதிய இணைப்புகள் ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருவதாக மெக்கின்சே ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.