அலுவலகம் மற்றும் வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும் போது மிகவும் சிரமப்படுவர்.
வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது.
மழைக்கோட்டு போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில் 2 மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவை உயர் சக்தி கொண்ட பற்றரிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பற்றரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்.
பற்றரிகள் மூலம் இயங்கும் மின்சார விசிறிகள் ஒரு நிமிடத்துக்கு 20 லிட்டர் காற்றை உற்பத்தி செய்து சட்டையின் உள்பகுதி முழுவதும் பரவச் செய்கிறது.
இந்த காற்று உடனக்குடன் சட்டையின் கழுத்துப் பகுதி மற்றும் கையின் மணிக்கட்டு வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால் உள்ளே சுழலும் காற்று சூடாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. குளிர் தன்மை அப்படியே பராமரிக்கப்படுகிறது.
இந்த சட்டையை அணிந்து கொண்டால் ஏர்கண்டிசனில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தொடர்ந்து 11 மணி நேரம் பயன்படுத்த முடியும். மற்ற ஏர்கண்டிசனுடன் ஒப்பிடும் போது இதை இயக்கச் செய்ய ஆகும் செலவு குறைவு.
தனி நபர் ஏர்கண்டிசன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டையின் விலை குறைந்த பட்சம் 87 பவுண்டுகள் ஆகும். இதை விட அதிகமான விலைக்கும் சட்டைகள் உள்ளன.
இந்த சட்டைக்கு ஜப்பானில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் பல நிறுவனங்கள் ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.