Monday, July 25, 2011

கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா?

கூகுளின் சமூகவலையமைப்பான கூகுள் + அறிமுகப்படுத்தப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 20 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாக இணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பல்வேறு விமர்சனங்களுக்கு இது முகங்கொடுத்திருந்தது.
சோதனைத்தொகுப்பாகவும் , மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பாவனையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

உலகளாவிய ரீதியில் சராசரியாக தினமும் 7.63 இலட்சம் பேர் இதில் இணைந்துவருகின்றனர்.

இதில் அமெரிக்காவில் இருந்து 5.3 மில்லியன் பேரும் இந்தியாவிலிருந்து 2.8 மில்லியன் பேரும் பாவனையாளர்களாக உள்ளனர்.

ஆரம்பத்தில் பேஸ்புக்கைக் கண்டு கூகுள் பயந்த காலம்போய் கூகுள் + ஐக் கண்டு பேஸ்புக் பயப்படும் காலம் விரைவில் வரவுள்ளதாக தற்போதே செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

பேஸ்புக் பாவனையாளர்கள் சுமார் 750 மில்லியன் பேர் உள்ளனர்.

கூகுளின் மற்றைய சேவைகளின் பாவனையாளர்கள் சுமார் 1 பில்லியன் பேர் வரையுள்ளனர்

எதிர்காலத்தில் இவர்களும் கூகுள் + ஐ நோக்கி படையெடுத்தால் பேஸ்புக்கின் நிலை சற்றுக் கேள்விக்குறியே.

எனினும் அவ்வாறு பேஸ்புக்கை முந்துவது இலகுவானதல்ல என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தற்போதைய வேகத்தில் கூகுள் + இன் வளர்ச்சி தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தொட்டுவிடும் என்பது மட்டும் உறுதி.