Tuesday, June 14, 2011

மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க புது கருவி கண்டுபிடிப்பு இந்திய நிபுணர்கள் சாதனை

பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க அதிநவீன கருவியை, ரஷ்ய குழுவுடன் இணைந்து இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். துல்லியமாக கண்டறிவதுடன், எந்த பாதிப்பும் ஏற்படாது; கட்டணம் வெறும் 150 ரூபாய் தான் ஆகும்.
அலகாபாத் நகரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியை சேர்ந்த நிபுணர்கள், ரஷ்யாவின் ரேடியோ இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வில் இறங்கினர்.
மார்பக புற்றுநோயை கண்டறியும் கருவியை மிகவும் நவீனமயமாக கண்டுபிடிக்க இந்த குழுவினர் மேற்கொண்ட முயற்சிக்கு  வெற்றி கிடைத்துள்ளது. இப்போதுள்ள கருவியை விட, எடையும் குறைவு. விலையும் குறைவு. ஆனால், கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் இணைந்த பல துல்லியமான தகவல்களை தரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது இது.
இந்த கருவியின் எடை ஒன்றரை கிலோ தான். விலையோ 12 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். இந்த கருவியில் ஆய்வு செய்தால் ஒரு நோயாளிக்கு 150 ரூபாய் தான் செலவாகும்.
இப்போது பயன்பாட்டில் உள்ள கருவியின் எடை மிகவும் அதிகம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது மிகவும் கஷ்டம். ஆனால், புதிய கருவியை எளிதில் ஒரு சூட்சேசில் வைத்து  கொண்டு செல்லலாம்.
‘இந்த கருவியில் பல நவீன பயன்கள் உள்ளன. இதில் உள்ள சென்சார் மூலம் எந்த பாதிப்பும் செல்களுக்கு ஏற்படாது. சோதனை செய்தபின், உடனுக்குடன் துல்லியமான தகவல்கள் கிடைக்கும். எந்த செல்லில் பாதிப்பு என்பதை சொல்லி விடும். ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரில் இந்த கருவியை இணைத்து விட்டால் போதும், சோதனை முடிந்த 50 நொடிகளில் ரிசல்ட் கிடைத்து விடும்’ என்று அலகாபாத் தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் திவாரி கூறினார்.