Friday, April 1, 2011

புதன் போட்டோவை அனுப்பியது ‘மெசஞ்சர்’- Video

மெசஞ்சர்
6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை சமீபத்தில் சென்றடைந்திருக்கும் ‘மெசஞ்சர்’ விண்கலம் முதல் போட்டோவை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா&2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் சென்ற ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு புதன் சுற்றுவட்ட பாதையை கடந்த 17&ம் தேதி சென்றடைந்தது. விஞ்ஞானிகளின் 36 ஆண்டு கால உழைப்பு வெற்றிகரமாக முடிந்திருப்பதாக நாசா கூறியது.

சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகத்தில் வெப்பநிலை பூமியைவிட பல மடங்கு அதிகம். அதாவது, 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சூரியனின் பார்வை படாத இடங்களில் குளிரும் அதிகம் இருக்கும். இதை சமாளித்து ஆய்வு பணியில் ஈடுபடும் வகையில் மெசஞ்சர் விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நாசா தெரிவித்தது.

இந்நிலையில், புதன் கிரகத்தை சென்றடைந்த ‘மெசஞ்சர்’ விண்கலம், கிரகத்தின் தரைப் பகுதியை படமெடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இதுபற்றி நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு மெசஞ்சர் விண்கலம் வெற்றிகரமாக புதன் கிரகத்தை சென்றடைந்துள்ளது. முதல் போட்டோவையும் அனுப்பியுள்ளது.

வட்டப்பாதையில் இருக்கும் விண்கலம் ஒன்றில் இருந்து புதன் கிரகத்தை படமெடுப்பது இதுவே முதல் முறை. விண்கலத்தில் உள்ள கேமரா உள்ளிட்ட அனைத்து கருவிகளும் கடந்த 23&ம் தேதி முதல் சிறப்பாக செயல்பட தொடங்கியிருக்கின்றன. விண்கலத்தின் ஆய்வுப் பணிகள் ஏப்ரல் 4&ம் தேதி முதல் தொடங்கும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் கூறினர்.