Friday, April 15, 2011

விண்மீன்களின் ஆயுள்

விண்மீன்களின் ஆயுள், அவற்றின் நிறை வெப்ப ஆற்றல் இவற்றுடன் தொடர்புடையது. விண்மீன்கள் அவற்றுள் ஏற்படும் நிறை ஈர்ப்பை ஈடுகட்ட அதிகமான ஆற்றலைச் செலவிட்டுக் குறிப்பிட்ட வெப்பநிலையைக் காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உயர் உள் வெப்பநிலையைக் காக்க ஹைட்ரசன் அணு கருப்பிணைவு அதிகமாகவும் துரிதமாகவும் நடைபெறும்.

இதனால் பெரியவிண்மீன்கள் துரிதமாகத் தமது ஹைட்ரசன் எரிசக்தியை இழந்து குளிந்து சுருங்கி ஆயுளை இழக்கின்றன. சொல்லப் போனால் ஒரு விண்மீனின் ஆயுள் அதன் நிறையின் இருமடிக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் இருக்கின்றது. அதாவது நிறை, இருபங்கு அதிகரித்தால் ஆயுள் நான்கில் ஒன்றாகக் குறைந்து விடும்.

இதிலிருந்து விண்மீன்களின் அளவும் நிறையும் அதிகரிக்க ஆயுள் குறைவது தெரிகின்றது. நமது சூரியன் ஒரு நடுத்தர அளவுடைய விண்மீனாகும். இதன் ஆயுள் சுமார் 10,000 மில்லியன் ஆண்டுகள். இதுவரை நமது சூரியன் பாதி ஆயுளை இழந்துள்ளது. நமது சூரியனைப் போல் முப்பது மடங்கு பெரிய விண்மீன் ஒரு சில மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும், நமது சூரியனை விட அளவில் மிகச் சிறிய விண்மீன் நமது சூரியனின் ஆயுளை விட அதிக மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும் பெற்றிருக்கும்.