Friday, April 22, 2011

அழிவின் விளிம்பில் பவள பாறை

ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. வேர்ல்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிட்யூட் (டபிள்யூ.ஆர்.ஐ), அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்ட்ரேஷன், உலக மீன்நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப்பாறைகள் குறித்த மெகா ஆய்வை நடத்தின. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்:
வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது. கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன்பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.
இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும்.

2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடுகூட இருக்காது. பவளப் பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் பாதுகாப்பு சாட்டிலைட்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக, விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதை உணர்வதன் மூலம் பவளப்பாறைகள் மட்டுமின்றி கடல் வளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.