Wednesday, March 23, 2011

பிரபஞ்சத் தோற்றம்.

Universe
புவியின் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளி என்பது, நம்மால் முழுவதும் அறிந்து கொள்ள முடியாத, எல்லையற்ற அண்ட வெளியாகும். விண்வெளியானது எல்லாத் திசைகளிலும் முடிவற்ற அளவில் விரிவடைந்து கொண்டே செல்லும் ஒரு வெற்றிடப் பரப்பாகும். விண்வெளியில் பிரபஞ்சங்கள், பால்வழி மண்டலங்கள், விண் மீன்கள், நமது சூரீயக் குடும்பம் எல்லாம் உள்ளன. பிரபஞ்சங்களுக்கிடையே உள்ள வெளியில் காற்று மண்டலம் கிடையாது. இரவானாலும், பகலானாலும் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளி இருண்டே (கருமையாக) காணப்படும்.
நமது பிரபஞ்சம் எவ்வாறு, எப்பொழுது உருவானது என்பதை அறிவியலார், ஹபுல் விதி
(Hubble's Law) என்ற கோட்பாட்டிலிருந்து கருத்துரைத்துள்ளனர். சுமார் 1600 கோடி வருடங்களுக்கு முன்பு மிகுந்த அடர்த்தியும், மிக உயர் வெப்ப நிலையும் கொண்ட நிறை ஒன்று வெடித்துச் சிதறியது. அப்போது இதன் கன பரிமாணம் சுழியாகும். இதன் பின் பிரபஞ்சம் விரிவடைந்து, காலம் செல்லச் செல்ல மெதுவாகக் குளிர்ந்தது. இந்நிலையில் பிரபஞ்சத்தில் தற்போது நாம் காணும் எந்த விண்பொருட்களும் இல்லை. பிரபஞ்சம் வெறும் கதிர்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது.

இக்கதிர்களிலிருந்து நிறையுள்ள துகள்கள், அணுக்கள் முதலியன உருவாயின. எளிய தனிமங்களாக ஹுலியம், ஹைடிரசன், டிட்ரியம் முதலிய அணுக்கருக்கள் உருவாயின. இதன் பின் உருவான விண்முகில்கள் அண்டமாகப் (Galaxy) பரிமாணித்தன. பிரபஞ்சம் விரிவடைந்து, கொண்டே செல்வதால் அண்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன. அறிவியலார் ஐன்ஸ்டின் (Einstein 1879-1955) விதிப்படி விரிவடைந்து கொண்டே செல்லும் பிரபஞ்சம் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் சுருங்கலாம்.

எவ்வாறெனில் பிரபஞ்சத்தில் மொத்த நிறை குறிப்பிட்ட அளவிற்கு மேலாக இருந்தால் பிரபஞ்சத்தின் சொந்த நிறை ஈர்ப்பு விரிவடைகின்ற அண்டங்களை ஒரு கட்டத்தில் தடைப்படுத்தி, பின்னர் இந்நிறை ஈர்ப்பினால் கவரப்பட்டுப் பிரபஞ்சம் சுருங்கி மறுபடியும் ஒரு புள்ளியாக மாறும் வாய்ப்புண்டு.

அவ்வாறன்றிப் பிரபஞ்சத்தின் நிறை குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாக இருந்தால் பிரபஞ்சம் முடிவில்லாது விரிவடைந்து கொண்டே செல்லும். இதனால் அண்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று தொடர்ந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே தற்போது நமது கண்ணுக்குப் புலப்படும் அண்டங்கள் நமது அண்டத்திலிருந்து வெகு தொலைவிற்குப் போய்விடும்.