Wednesday, March 9, 2011

பால்வழி மண்டலம்

அண்டம்
நமது அண்டமானது சுருள் வில் வடிவமுடையது. சுருள்வில் போன்ற பல கைகளையுடைய நமது அண்டத்தில் "சுருள் கை" (Spiral arm) போன்ற பகுதிகளில் மிக அதிகமான அடர்த்தியில் விண்மீண்கள் உள்ளன. நமது சூரியன் பால்வழி மண்டலம் எனப்படும் நமது அண்டத்தில் உள்ள ஓரியான் நெபுலா (Orion Nebula) உள்ள "ஓரியன் கை" (Orion Arm) எனப்படும் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. நமது அண்டமானது சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் அளவு (விட்டம்) பரந்து விரிந்து காணப்படுகிறது. இதன் மையப்பகுதியானது நுண்மையான பனிக்கட்டி போன்ற தூசு துகள்களால் ஆனது.
இம்மையப் பகுதி நமது சூரியனிலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் நமது அண்டத்தின் வயது  சுமார் 12,000 முதல் 14,000 மில்லியன் ஆண்டுகள் என்றும். இதில் சுமார் 1,00,000 மில்லியன் விண்மின்கள் உள்ளன என்றும் கணக்கிட்டுள்ளனர். நமது அண்டமானது அதன் அச்சைப் பற்றிச் சுழலும் வேகம், விளிம்புப் பகுதியைக் காட்டிலும் அச்சுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் மிகுந்து காணப்படுகிறது.

அதாவது மையப் பகுதியானது அச்சைப் பற்றி ஒரு சுற்றை முடிக்க சுமார் 50,000 ஆண்டுகள் ஆகின்றது. நமது சூரியன், சூரியக் குடும்பத்திலுள்ள கிரகங்கள், கோள்கள் அனைத்தும் மற்றும் நமது சூரியனுக்கு அருகாமையில் உள்ள விண்மீன்கள் ஆகியனவும் நமது அண்டத்தில் சுழன்று கொண்டுள்ளன. இந்நிலையில் நமது சூரியன் அது அமைந்துள்ள நமது அண்டத்தில் மைய அச்சைப் பற்றி ஒரு சுற்று சுற்றி வருவதற்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

இக்கால அளவுக்கு "காஸ்மிக் ஆண்டு" (Cosmic Year) என்று பெயர். மேலும் நமது அண்டத்திற்கு இரண்டு துணை அண்டங்கள் உள்ளன. இவற்றுக்கு மெகல்லன் பெரிய வான் முகில் (Large Cloud) என்று பெயர். இவை இரண்டும் நமது அண்டத்தின் கவர்ச்சியினால் நமது அண்டத்தைச் சுற்றிச் சுழல்கின்றன.