பூமிக்கு அருகில் 134 விண்கற்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டறியாத 20 வால் நட்சத்திரங்கள், 33 ஆயிரம் சிறிய கிரகங்கள் மற்றும் விண்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை சுற்றி சூரிய குடும்ப ஏரியாவில் சுற்றிவரும் விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ‘நியோவைஸ்’ என்ற ஆய்வுத் திட்டத்தை நாசா 2009 ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.
கடந்த ஓராண்டு சாதனை பற்றி நாசா அதிகாரி லிண்ட்லே ஜான்சன் கூறியதாவது: நியோவைஸ் ஆய்வு மூலம் 20 வால் நட்சத்திரங்கள், 33 ஆயிரம் விண்கற்கள், சிறிய கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை இதுவரை கண்டறியப்படாதவை. இவை செவ்வாய் - வியாழன் இடைப்பட்ட பகுதியில் உள்ளன.
மேலும், சூரியனை பூமி சுற்றி வரும் பாதையில் இருந்து 4.5 கோடி கி.மீ. தொலைவுக்குள் 134 விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் சுற்றுகின்றன. குறைந்த தூரம் என்றாலும் இவற்றால் பூமிக்கு ஆபத்து இல்லை. இவற்றின் அடர்த்தி, அளவு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இவ்வாறு ஜான்சன் கூறினார்.