Sunday, January 30, 2011

ரேடார் கண்ணில் மண்ணைத் தூவும் போர் விமானத்தைத் தயாரித்தது சீனா

ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு.
இத்தகைய விமானத்தைத்தான் இப்போது சீனா உருவாக்கியுள்ளதாம். இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள படங்களைப் பார்க்கும்போது அது சோதனை ரீதியான விமானமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தியில், ஜே20 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், சோதனைக் கட்டத்திற்கு முந்தைய கட்டமான ஹை ஸ்பீட் டாக்சி டெஸ்ட் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
இந்த போர் விமானத் தயாரிப்பு உண்மையாக இருக்குமானால், சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.
ஆனால் இதை மறுக்கிறார் சீன பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். இதுகுறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக நிபுணர் லி டகுவாங் கூறுகையில், இந்த செய்திகள் வெறும் யூகச் செய்திகளே. எப்22 விமானத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆக்கிரமிப்பு போர் விமானம். உலகத்தை தனது கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு சக்தியின் கையில் இருக்கும் அபாயகரமான ஆயுதம்.
ஆக்கிரமிப்பு மனோபாவத்தில் வளர்ந்தது அமெரிக்காவின் ஆயுத பலம். ஆனால் சீனாவின் ராணுவ வளர்ச்சி என்பது இயற்கையானது, சுய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டது. எனவே எங்களுக்கு மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் தேவை இல்லை என்கிறார் அவர்.
இவர் இப்படிச் சொன்னாலும் கூட ஸ்டெல்த் போர் விமானத் தயாரிப்பில் சீனா படு மும்முரமாக இருப்பது உண்மைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல சீன இணையதளங்களில் ஜே20 போர் விமானம் ரன்வேயில் செல்வது போன்றும், அதன் முன்பக்கத்தில் பாராசூட்கள் விரிவது போன்றும் உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் இந்த மாயாவி விமானத்தால் அமெரிக்கா பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இந்தியா கவனமுடன் இருந்தாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை