Tuesday, March 1, 2016

சிறுவர் துஷ்பிரயோக விவகாரத்தில் திருச்சபை பாரிய தவறிழைப்பு

கத்தோலிக்கத் திருச்சபையில் கட்டமைப்பு ரீதியாகக் காணப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில், கத்தோலிக்கத் திருச்சபை பாரிய தவறுகளை இழைத்துள்ளதாகவும் பொதுமக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கர்தினாலான ஜோர்ஜ் பெல் தெரிவித்துள்ளார். நிறுவனரீதியாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக ஆராய்வதற்காக, அவுஸ்திரேலியாவின் அரச ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு, இத்தாலியின் றோமிலிருந்து, கர்தினால் பெல், வாக்குமூலமளித்தார். அவர் தங்கியிருந்த அறையில், சிறுவர் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் அமர்ந்திருந்தனர். சிறுவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிறுவர்கள், திருச்சபை அதிகாரிகளால் நம்பப்பட்டிருக்கவில்லையெனத் தெரிவித்த அவர், இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட பாதிரியார்கள், ஒரு பிரிவிலிருந்தும் மற்றைய பிரிவுக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவித்தார். 'பாரிய தவறுகளை திருச்சபை இழைத்தது. அவற்றுக்குப் பரிகாரம் தேடுவதற்கு அது முயல்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையானது பல இடங்களில் -  நிச்சயமாக அவுஸ்திரேலியாவில் - பாரிய தவறுகளை இழைத்துள்ளதோடு, மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது" என்றார். 74 வயதான கர்தினால் பெல், சிறுவர் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கப்படாததோடு, இவ்விடயத்தில் மெதுவான செயற்பாட்டுக்காக, திருச்சபை சார்பாக இரண்டு முறை மன்னிப்பும் கோரியிருந்தார். அவர் தற்போது, வத்திக்கானில் நிதியமைச்சராகப் பணியாற்றுகிறார். தனது வாக்குமூலத்தில் அவர், 1970களில், பாதிரியார் ஒருவர், சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாகத் தகவல்கள் இருந்ததாதகவும், ஆனால் மேலதிகாரிகள், அவர் குற்றமற்றவர் எனக் கருதி, அவர் மீது நம்பிக்கை வைத்ததாகவும் ஏற்றுக் கொண்டார். இதன்போது, ஏனைய சம்பவங்கள் குறித்துத் தனியாக விவரிக்குமாறு கோரப்பட்ட போது, அவை குறித்துத் தனக்கு ஞாபகம் இல்லை எனத் தெரிவித்தார். இது, றோமிலும் சிட்னியிலும் இருந்த பாதிக்கப்பட்டவர்களைக் கோபப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. இதன்போது, சிட்னியிலுள்ள விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் ஒன்றுகூடிய, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவாளர்கள், கர்தினால் பெல்லுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 'பாப்பரசரே, பெல்லை உடனடியாகப் பதவி விலக்குங்கள்", 'பெல், நரகத்துக்குப் போங்கள்" எனக் கோஷமிட்டனர். இந்த விசாரணை நிறைவடைந்து சிறிது நேரத்தில், பாதிரியார்களின் பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுவர்கள் பற்றிய திரைப்படமான ஸ்பொட்லைட், சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.