Monday, February 29, 2016

சிரியாவில் போர் நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சிரியாவில் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு, இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 5 வருடங்களில், அமைதியான நாளாக, இன்றைய தினம் அமைந்தது. மோதல் தவிர்ப்பின் முதல் நாளான சனிக்கிழமை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதோடு, அரசாங்கத் தரப்பும் சிரியப் போராளிகளும், மற்றைய தரப்பைக் குற்றஞ்சாட்டியிருந்தன. இதுகுறித்து, டமாஸ்கஸ்ஸிலுள்ள மருத்துவபீட மாணவனொருவன் கருத்துத் தெரிவிக்கையில், 'குண்டுகளின் சத்தமின்றி நாங்கள் துயிலெழுந்தது, இது தான் (அண்மைக்காலத்தில்) முதற்தடவையென்று நான் நினைக்கிறேன்" என்றார். இந்த மோதல் தவிர்ப்பைக் கண்காணிப்பதற்காக, ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள குழு, சனிக்கிழமையன்று மோதல் தவிர்ப்பு, பெருமளவில் வெற்றிகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்தது. மோதல் தவிர்ப்பை மீறிய சில சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை, எனினும் அவை, விரைவிலேயே இல்லாது போனதாகத் தெரிவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமையை விட அமைதியான சூழலே காணப்பட்டதாக, அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மோதல் தவிர்ப்பு பின்பற்றப்படுகின்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. றக்கா மாகாணத்திலுள்ள தல் அபியட் நகரில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதோடு, குர்திஷ்கள் தரப்பில் 20 பேரும் பொதுமக்களில் இருவரும் கொல்லப்பட்டனர். அதேபோன்று, சனிக்கிழமை மாத்திரம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழு மீது, அமெரிக்க விமானங்களால் 10 வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, மோதல் தவிர்ப்புக்கு அமைவாக, ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா தவிர்ந்த ஏனைய குழுக்கள் உள்ள பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களை நிறுத்துவதாக, ரஷ்யா அறிவித்துள்ளது.