Tuesday, February 3, 2015

இலங்கை மீது அழுத்தமும், உதவியும் தொடரும்: நிஷா பிஸ்வால்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று உறுதி கூறியிருப்பதாக தமிழ்த் தேசியக் அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைக்கானத் துணைச் செயலர் நிஷா பிஸ்வாலை கொழும்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இலங்கையில் எப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புகள், புதிய ஆட்சியின் தமிழ் மக்களுக்கு எப்படியான நிவாரணம் கிடைக்க முடியும் என்பது உட்பட பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழ் மக்களின் பங்களிப்பை நிஷா பிஸ்வால் அவர்கள் நினைவு கூர்ந்ததாகவும், மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுவது, நீண்டகாலமாக சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்வது ஆகியவை தொடர்பில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் தங்களுக்கு அவர் விளக்கியதாகவும் சுமந்திரன் கூறினார்.
இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்ச்சியாக முழுமையாக இருக்கும் என்றும், குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று எட்டப்படுவதற்கு தமது அரசு முழுமூச்சுடன் செயல்படும் என்றும் நிஷா பிஸ்வால் தமது குழுவினரிடம் தெரிவித்ததாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவ்வகையில் இலங்கை மீதான அழுத்தமும், அதற்கான உதவியும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என தங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நன்றி பிபிசி