காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த 7ஆம் திகதி சென்ற மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.
இதுநாள் வரையிலும் விமானம் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
அனுபவமிக்க விமானிகளால் கடத்தப்பட்டதாக தகவல்
இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது 2 பேர் விமானத்தை கடத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் விமானத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சமிக்ஞைகள் தானாக செயலிழக்கவில்லை, அது மனிதர்களால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்துப் பார்க்கும் போது, விமானம் கடத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
விமானம் கடத்தலின் பின்னணி குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறிய அவர், விமானம் கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருவதாக கூறினார்.
ஆயினும் மாயமான விமானம் பற்றி இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விமானத்தின் தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்ட பிறகு, விமானம் மலேசிய தீபகற்பத்தில் பறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக், மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மலேசிய விமானம் கிழக்கு கடற்கரை பகுதியை அடைவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே அதன் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.
விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகளைச் சேர்ந்த 42 விமானம், 39 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமானதும் முதலில் தென் சீன கடல் பகுதியில் தேடினோம். அந்த தேடுதல் பணியை முடித்துக் கொள்வதாக இருக்கிறோம்.
விமானம் அதன் பாதையில் இருந்து ஏன் விலகிச் சென்றது என்பதை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
செயற்கோள் தகவல்கள், விமானம் வடக்கு தாய்லாந்தில் இருந்து கஸகஸ்தான் பகுதி அல்லது இந்தோனேசியாவில் இருந்து இந்தியப் பெருங்கடல் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம் என தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஊடகங்களில், மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானாலும் மற்ற சாத்தியக்கூறுகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அந்தமான் பகுதிக்கு சென்றதா?
அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது.
கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அமெரிக்கா அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியினை தொடங்கவுள்ளது.
இன்னும் சிக்னல் இருக்கு...
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் சகல தொடர்புகளும் அறுந்து போய்விட்டாலும், விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மாத்திரம் இன்னும் செயல் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானத்தின் இந்த செட்டிலைட் கம்யூனிகேஷன் லிங்கிலிருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. இதனை 'ஹேன்ட்ஷேக்' என்று சொல்வார்கள். அதாவது செல்போன் ஆன்டெனா சிக்னல் தேடும்போது வருகிற சமிக்ஞை மாதிரி இது. அந்த 'ஹேன்ட் ஷேக்' இருப்பதை வைத்துதான் விமானம் எங்கோ பத்திரமாக தரை இறங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்கள் விமானத்தை மலேசிய தீபகற்பத்து நேர் மேற்கில் திருப்பியுள்ளதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மேற்குக் கரைப் பகுதிகள், அந்தமான் தீவுகள் மற்றும் மடகாஸ்கர் வரையிலான ஏதோ ஒரு பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.