Wednesday, June 8, 2011

எய்ட்ஸ் பற்றி தெரியவந்து முப்பதாண்டுகள்

நாம் எல்லோரும் இன்று நன்றாக அறிந்துள்ள எய்ட்ஸ் நோய் பற்றி முதல் முதலாக தகவல் வெளியாகி இன்றோடு முப்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1981ஆம் வருடம் அது. இதேபோல கோடைக் காலத்தின் சமயத்தில் கலிபோர்னியா மாகாணத்து லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், இளம் மருத்துவர் ஒருவர் தன்னிடம் வந்த ஐந்து நோயாளிகளை விநோதமான ஒரு நோய் தாக்கியுள்ளதை கவனிக்கிறார். அவர்கள் அனைவருக்குமே நிமோனியா என்ற நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறியும் சருமப் புற்றுநோய் அறிகுறியும் ஒருசேர காணப்பட்டன.
அந்த ஐந்து பேருக்கும் இடையிலான ஒரே ஒற்றுமை என்றால், அந்த இளைஞர்கள் அனைவருமே ஒருபால் உறவுக்காரர்கள் என்பதுதான். எய்ட்ஸ் நோய்ப் பாதிப்புகளை தான் அவதானித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை அந்நேரம் மைக்கேல் கோட்டலெய்ப் என்ற அம்மருத்துவர் உணர்ந்திருக்கவில்லை.
அதன் பின்னர் இரண்டு வருடங்கள் பின்னரே எய்ட்ஸ் நோய்க்கு காரணமான ஹெச்.ஐ.வி. கிருமி அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர்தான் ஒருவருக்கு அக்கிருமித் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான இரத்தப் பரிசோதனைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக எய்ட்ஸ் நோயினால் ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் அண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ள எண்ணிக்கைப் பிரகாரம் மட்டுமே உலக அளவில் இந்த நோய் இதுவரை சுமார் மூன்று கோடி உயிர்களைக் காவுகொண்டுள்ளது. ஆனால் இந்த நோயின் பாதிப்புகள் உச்சத்துக்கு சென்ற காலகட்டங்கள் முடிந்துவிட்டன. அப்படியான நிலைமை இனி வராது என்ற நம்பிக்கை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தற்போது வந்துள்ளது.
உலகிலேயே மிகவும் நன்றாக ஆராயப்பட்ட நோய்க்கிருமிகளில் ஒன்றாக இருக்கிறது ஹெச்.ஐ.வி. இந்தக் கிருமித் தொற்று வந்தவர்களுக்கு சரியான மருந்துகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களால் பல காலத்துக்கு கிட்டத்தட்ட இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
ஆனால் ஒழுங்கான மருந்துகள் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று வந்தவர்களுக்கு கிடைப்பது என்பதுதான் மிகப் பெரிய தடையாக உள்ளது. உலக அளவில் இந்த நோயைக் கட்டுக்குள் வைப்பதிலுள்ள மிகப் பெரிய சவால் அதுதான்.
ஐ.நா. மன்றத்தின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான யுஎன் எய்ட்ஸின் அண்மைய கூற்றுப்படி, உலகின் பல நாடுகளில் ஹெச்.ஐ.வி. பரவல் விகிதம் சரிந்து வருகிறது. தவிர அண்டி ரெட்ரோ வைரல் சிகிச்சை கிடைக்கும் விகிதமும் அதிகரித்துக்கொண்டு வருகிறதாம்.

நன்றி- பி.பி.சி தமிழ்