Tuesday, May 31, 2011

அழிவின் விளிம்பில் நைட்டிங்கேல்

பறவைகளில் மிகவும் அரிதானது நைட்டிங்கேல். வசீகர குரல் கொண்டது. இதன் அழகையும் குரலையும் வர்ணித்து இங்கிலாந்து கவிஞர் ஜான் கீட்ஸ் எழுதிய கவிதை உலகப் புகழ் பெற்றது. இந்த அரிய பறவையினம் அழியும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் 30 ஆண்டுகளில் இது இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் உறுதியாகி உள்ளது.
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுவதாவது: கடந்த 40 ஆண்டுகளில் நைட்டிங்கேல் பறவை இனம் 90 சதவீதம் அழிந்து விட்டது. காடுகள் அழிக்கப்படுவதும் அதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதும் இதற்கு முக்கிய காரணம். இதுதவிர, மன்ட்ஜாக் எனப்படும் காட்டு மான் வகைகளாலும் நைட்டிங்கேல் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இவை இலங்கை, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு கடந்த 1925ம் ஆண்டு வாக்கில் இடம் பெயர்ந்தவை. நைட்டிங்கேலின் கூடுகளை இவை அழித்துவிடுகின்றன.

இதன் காரணமாக நைட்டிங்கேல் பறவையினம் மெல்ல அழிந்து வருகிறது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நைட்டிங்கேல் பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.