Wednesday, April 6, 2011

விண்மீன்களின் தோற்றம்

விண்மீன்கள், வெப்பத்தையும், ஒளியையும் உமிழும் வாயு வினாலான வெப்பக் கோள்களாகும். விண்மீன்கள் பல்வேறு அளவுகளில், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வெப்ப நிலையில் இருக்கின்றன. இதைப் பொறுத்து அவற்றின் ஒளிச் செறிவு மற்றும் நமது பூமியிலிருந்து அவை இருக்கும் தொலைவு ஆகியன மாறுபடுகின்றன. நமது சூரியனும் ஒரு நடுத்தர அளவுடைய விண்மீன்தான். நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியனாகையால், அது அளவில் பெரியதாகத் தென்படுகின்றது.
இவ்விண்மீன்கள் எவ்வாறு தோன்றின எனப் பல ஆண்டுகளாக இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து அறிவியலார் இப்போதைய நிலையில் பின் வருமாறு கருத்துரைத்துள்ளனர்.

விண்வெளியில் தூசும், வாயுவும் மிகக் குறைந்த அடர்த்தியில் காணப்படுகிறது. எல்லா விண்மீன்களும் தூசு நிரம்பிய வாயு விண் முகில்களிலிருந்து உண்டானவை, விண்மீன்கள் உருவாக்கம் நம்மால் அறிய இயலாத ஒரு நிகழ்வினால் தூண்டப்படுகிறது. இதனால் விண் முகிலிலுள்ள வாயுவும், தூசு துகள்களும் பொது மையத்தை நோக்கிச் செல்கின்றன. அதாவது தன் சொந்த நிறை ஈர்ப்பினால் விண் முகில் சுருங்கத் தொடங்குகின்றது. இதனால் அடர்த்தி சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறு மேலும் அதிகமான அளவு தூசுத் துகள்களும் வாயுவும் ஒன்று சேர்வதால், ஈர்ப்பு சக்தியின் அடர்த்தி காரணமாக அடர்த்தி அதிகமாவதால், அழுத்தம் அதிகமாகி வெப்பநிலை உயர்வடைகிறது.

இம்மாறுதலின் போது ஒரு சில நூறு ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபின் வெப்ப நிலை சில ஆயிரம் டிகிரி அளவு காணப்படும் மையத்தில் ஏற்படும் அழுத்த அதிகரிப்பு, நிறை ஈர்ப்பு சக்தியை ஈடுகட்டும் அளவுக்கு அதிகரித்த பின் விண்முகில் சுருங்குவது நின்று விடும். இந்நிலையில் தொடக்க விண்மீன் (Proto Star) உருவாகின்றது. இருந்தாலும் இந்த தொடக்க விண்மீன் ஒரு முழு விண்மீன் அல்ல. இந்நிலையில் அணுச் சேர்க்கை வெப்ப உலையாக இது மாறவில்லை. எனவே நமது கண்ணுக்குத் தெரியக்கூடிய ஒளியை அது உமிழாது. ஆனால் அது வெளியிடும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு வானவியலார் தொலை நோக்கியில் காணலாம். தொடக்க விண்மீன் உருவானதும் விண்முகில் சுருங்குவது நின்று விட்டாலும், இதன் மையத்தில் நிறை ஈர்ப்பு சக்தியினால் ஏற்படும் சுருக்கம் பல மில்லியன் ஆண்டுகளுக்குத் தொடரும்.

இவ்வாறு சுருங்கும் போது உருவாகும் ஆற்றல், மையப் பகுதியை மேலும் வெப்பமடையச் செய்கிறது. இவ்வெப்ப நிலை ஒரு கோடி டிகிரி வரை உயரும் பொழுது விண்மீனின் அணு உலை கனல் விடத் தொடங்குகிறது. இந்த உயர் வெப்ப நிலையில், விண்மீன்களின் மையப் பகுதியில் பேரழல் (மின்மம்) (Plasma) நிலையில் உள்ள ஹைடிரசன் அணுக்கருக்கள் பிணைந்து ஹுலியமாக மாறுகிறது. இவ்வணுக்கருப் பிணைப்பின் போது அதிக அளவில் சக்தி வெளிப்படுகிறது. இவ்வணுக்கருப் பிணைப்பு நிகழ்வு, விண்மீனுக்குப் பலகோடி ஆண்டுகளுக்கு சக்தியைக் கொடுக்கிறது. இந்நிலையில் இது ஒரு முழுமையான விண்மீனாகத் தோன்றிக் காட்சியளிக்கின்றது. இவ்வாறு விண்மீன் உறுதி நிலையை அடைய சுமார் 2000 லட்சம் ஆண்டுகள் ஆகின்றது. இதன்பின் இவ்விண்மீன் ஆயிரம் கோடி ஆண்டுகள் நிலைத்துக் காணப்படும்.

எல்லா விண்மீன்களும் தனியாகப் பிறப்பதில்லை, பெரும்பாலான விண்மீன்கள் கூட்டமாகவே பிறக்கின்றன, சில இரட்டை குடும்பமாகச் சுற்றிலும் (காள்களுடன் பிறக்கின்றன. மிகப் பெரிய வாயு விண்முகில்களிலிருந்து பல விண்மீன்கள் கூட்டமாகப் பிறக்கின்றன. நமது சூரியனைப் போன்றுள்ள விண்மீன்கள் தனியாக மிகச் சிறிய கோள வடிவ இருண்ட விண்முகில்களிலிருந்து பிறக்கின்றன. கூட்டமாக அதிக எண்ணிக்கையில் பிறக்கும் விண்மீன்கள் அப்படியே நீண்ட காலம் இருப்பதில்லை. ஒரு சில மில்லியன் ஆண்டுகளில் அவை அண்டம் முழுவதும் பரவி விரவிக் காணப்படும்.