Sunday, April 3, 2011

குவாசர்கள்

இதுவரை நமது அறிவியல் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளாலும் ஆராய்ச்சிகளாலும் நமது கண்ணுக்கும், நமது கருவிகளின் புலனுக்கும் தெரியக்கூடிய எல்லை வரையில் பல விந்தைப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 1963 இல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசர்கள் (Quasars) புதிரானவை. குவாசர் என்பது ஒரு கூட்டுச் சொல் ஆகும். குவாசர்கள் தோற்றத்தில் ஒரு விண்மீனைப் போன்றே காட்சியளிக்கின்றன. இந்த குவாசர்கள் பல கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இக்குவாசர்கள் பல்வேறு அளவுகளில் மிகுதியாக ஒளியை உமிழ்கின்றன.
 ஓர் ஒளித் தொலை நோக்கியைக் கொண்டு பார்த்தோமானால் குவாசர்கள் சாதாரண மங்கிய ஒரு விண்மீனைப் போன்றே காணப்படுகின்றன. ஆனால் வானொலித் தொலை நோக்கியைக் கொண்டு ஆய்ந்தோமானால் குவாசர்கள் வானொலி அலை மூலங்களாகவும் உள்ளது தெரிய வருகின்றது. அதாவது குவாசர்கள் வானொலி அலைகள் மற்றும் எக்ஸ் கதிர்களை ஒளியுடன் உமிழ்கின்றது. ஒரு குவாசரானது நமது அண்டத்தில் 1,00,000 இல் ஒரு பகுதி அளவுடையது. ஆனால் அது உமிழும் ஒளியானது நமது அண்டத்தின் ஒளியைக் காட்டிலும், 100 முதல் 200 மடங்கு அதிகமாகும். இதுவரை இது போன்று சுமார் 1500 குவாசர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குவாசர்களின் கண்டுபிடிப்பு மேலும் பல ஆவலைத் தூண்டும் கேள்விகளை அறிவியலார்களிடையே எழுப்பியுள்ளது. இதனால் ஆராய்ச்சி வேட்கையும் அதிகரித்துள்ளது. பிரபஞ்சம் உருவாகத் தொடங்கிய முதல் மூன்று வினாடிகளில் அணுத்துகள்கள் உருவாயின எனில் அத்துடன் சேர்ந்து எதிர் அணுத்துகள்களும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அவை இதுவரை கண்டறியப்படவில்லை.

இதே போல் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் எதிர்ப்பொருட்கள் இருக்க வேண்டும். இதுவரை அவையும் கண்டறியப்படவில்லை. கண்டறியப்படாத இவ்வெதிர் அணுக்கள், எதிர்ப்பொருட்கள் அவற்றின் நிறை, இயக்கம், ஆற்றல் எல்லாம் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் வரலாற்றையும் தெரிவிக்கக் கூடியனவாக இருக்கலாம். எனவே இப்புதிகர்களைக் கண்டறியத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.