Monday, February 28, 2011

விலங்குகளின் குளிர்கால உறக்கத்தைப் போல மனிதர்களை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியுமா?

மனிதனின் செயற்கை உறக்கம்
சில விலங்குகள் குளிர் காலத்தை  உறக்கத்தில் கழிப்பதைப் போல மனிதர்களையும் செயற்கையாக உறக்கத்தில்  ஆழ்த்தமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  இதற்கான ஆராய்ச்சிகளில்  தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  பொதுவாக  அலஸ்கான் கரடிகள் பனிக்காலத்தின் போது சுமார் 7 மாதம் வரை நித்திரையிலேயே  கழிக்கக் கூடியன.


இக்காலப்பகுதியில் அவை உணவை  உட்கொள்வதில்லை ஏன் நீரைக் கூட பருகுவதில்லை.  இவ்வகையான குளிர்  காலத்திற்கு முன்னரே அதற்கு தேவையான கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை  உட்கொண்டு விடும் இவை சேமிக்கப்பட்டு உறக்கத்தில் இருக்கும் காலப்பகுதியில்  உறுப்புகளின் செயற்பாட்டிற்கு தேவைக்கேற்ப கடத்தப்படும்.  மேலும் அவை  நித்திரையிலிருந்து எழும்பும் போது எந்த உடல் நிலையில் இருந்தனவோ அதே  நிலையிலேயே இவை எழும்புகின்றன.
இக்காலப்பகுதியில் இவற்றின்  இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு சுமார் 8 முதல் 14 தடவையென குறைந்துவிடும்.  உடலில் வெப்பமும் சுமார் -12 பாகை செல்சியஸ் வரை குறைந்து விடுகின்றது.   இரத்த ஓட்டம், சுவாசம் என்பன அப்படியே குறைந்து விடும் மேலும் உடலின்  வளர்சிதைமாற்றமும் (Metabolism) மூன்றில் ஒன்றாக குறையும்.  மொத்தத்தில்  இவற்றின் உடலானது உயிரினை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புக்கள்  செயற்படும்.  இதே போன்ற உறக்க நிலைக்கு மனிதர்களையும் ஆழ்த்தும் முறையானது  நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் முதல் கடும்  சுகயீங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும் என அவர்கள்  தெரிவிக்கின்றனர்.
மனிதர்களின் உடலிலும் வளர்சிதை மாற்ற  வீதத்தினை குறைத்தல் மற்றும் மனித உடலின் திசுக்களுக்கு தேவையான ஒக்சிஜனின்  அளவைக் குறைத்தல் போன்ற ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தால் இந் நிலமை  சாத்தியமே என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கரடிகள் மட்டுமன்றி சில வகை  எலிகள், வெளவ்வால்கள், சில வகை பாம்புகளும் இவ்வகையான பனிக்கால  உறக்கத்திற்கு செல்கின்றன.