Saturday, February 12, 2011

அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம்

பைலட் இல்லாமல் தானே இயங்கக் கூடிய ஆளில்லா போர் விமானம் அமெரிக்காவில் சோதித்து பார்க்கப்பட்டது. கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உதவியுடன் இந்த விமானம் வெற்றிகரமாக பறந்தது. அமெரிக்க விமானப் படையில் ஆளில்லா போர் விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன.
கூடுதல் வசதிகளுடன் புதுப்புது விமானங்களை விமானப் படையில் அமெரிக்கா சேர்த்து வருகிறது. விமான தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் போயிங் மற்றும் நார்த்ராப் கிரம்மேன் நிறுவனங்கள் அமெரிக்க விமானப் படைக்கான விமானங்களை தயாரித்து கொடுத்து வருகின்றன.

அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆளில்லா போர் விமானம் தயாரித்துக் கொடுக்க நார்த்ராப் நிறுவனத்துடன் அமெரிக்க விமானப்படை 2007ல் ஒப்பந்தம் செய்தது. 2009ம் ஆண்டு கடைசிக்குள் விமானம் ரெடியாகும் என்று கூறப்பட்டது. இன்ஜின் ஸ்டிராட் ஆவது மற்றும் உயரே கிளம்பும்போது ஏற்பட்ட அதிக சத்தம் ஆகியவற்றை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இறுதிப்பணி தாமதமானது. கடந்த ஆண்டில் விமான வடிவமைப்பு முடிந்தது.

சாதாரண ஓடுதளம் அல்லது விமானம்தாங்கி கப்பலில் இருந்து லாவகமாக புறப்பட்டு உயரே கிளம்புவது, சீராக பறப்பது, மற்ற விமானங்களின் இயக்கத்தை அனுசரித்து பறப்பது, வானிலைக்கு ஏற்ப பயணத்தை மாற்றுவது, எரிபொருள் தீரும் நிலை ஏற்பட்டால் அருகே உரிய இடத்தில் தரையிறங்கி நிரப்புவது அல்லது நடுவானிலேயே நிரப்புவது, போர் சூழ்நிலையில் இலக்குகளை சரியாக கண்டுபிடித்து வெடிகுண்டுகள் வீசுவது என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கம்ப்யூட்டர் புரோகிராம்கள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்தும் தானாக நடக்கும். விமானத்தின் மொத்த செயல்பாட்டையும் தரையில் இருந்தபடி பைலட் கண்காணித்தால் போதும். ‘எக்ஸ் 47பி’ என்று பெயரிடப்பட்ட இந்த விமானத்தின் சோதனை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் கடந்த 4&ம் தேதி நடந்தது. சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இன்னும் 3 ஆண்டுகளுக்கு சோதனை ஓட்டமே நடக்கும். அதன் பிறகு முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.