Saturday, January 8, 2011

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த பெண் குரங்குகளுக்கு பரிசோதனை

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உலகை உலுக்கி வரும் எய்ட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய்.இது எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

தற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்துகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே உள்ள எய்ட்ஸ் மருந்துடன் துத்த நாகம் ரசாயன கலவையுடன் “ஜெல்” உருவாக்கினர். அந்த “ஜெல்” மருந்தை எய்ட்ஸ் நோயை உருவாக்கும் “எச்.ஐ.வி.” வைரஸ் கிருமி பாதித்த விலங்குகளிடம் பரிசோதித்து பார்த்தனர்.

இறுதியில் “எச்.ஐ.வி.” வைரஸ் பாதித்த பெண் குரங்கிடம் பரிசோதித்து பார்த்தனர். 2 வாரங்கள் தொடர்ந்து இந்த மருந்தை அவற்றின் உடலில் செலுத்தினர். அதை தொடர்ந்து எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளின் பாதிப்பு பெருமளவில் குறைந்தது. அதே முறையில் மனித உடலிலும் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது.

2 ஆண்டுகளில் 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் தேசிய புற்று நோய் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூயோர்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.