Sunday, January 2, 2011

நோய்களை நீக்கும் நரி வெங்காயம்'

செஞ்சி பகுதி காடுகள் மற்றும் மலை ஓரங்களில் காணப்படுவது நரி வெங்காயம் எனப்படும் காட்டு வெங்காயம். இதை அப்படியே உட்கொண்டால் நச்சு பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதை பக்குவப்படுத்தி முறையாக பயன்படுத்த வேண்டும்.


அரிஜீனீயா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இந்த நரி வெங்காயம் லிலியேசி (ப்ண்ப்ண்ஹஸ்ரீஹங்) என்ற குடும்பத்தை சேர்ந்தவை. இவை 200 கிராம் முதல் 500 கிராம் வரை எடை கொண்டவை. பார்ப்பதற்கு அசல் வெங்காயத்தைப் போலவே காட்சி அளிக்கிறது. அதிக நேரம் கையில் வைத்திருந்தால் கையில் அரிப்பு ஏற்படுகிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கணக்கன்குப்பம் காட்டுப் பகுதிகளில் உள்ள தாவரங்கள் செழிப்புடன் காட்சி தருகின்றன. செஞ்சியை சுற்றியுள்ள காடுகளில் ஏராளமான மூலிகைத் தாவரங்கள் உள்ளன. மலைச் சரிவில் இவை அதிகம் காணப்படுகிறது. கணக்கன்குப்பத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் காட்டில் இருந்து பறித்து செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ரவிச்சந்திரனிடம் நரி வெங்காயத்தை அளித்தார்.

தற்போது இந்த வெங்காயம் அரசு மருத்துமனையில் உள்ளது.  இது குறித்து மருத்துவர் ரவிச்சந்திரன் கூறியது: "இது மிக அரிய மூலிகைத் தாவரம். நரி வெங்காயம் எனப்படும் இது, இதய கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும். இதில் ஸ்கைலாரின் ஏ, ஸ்கைலாரின் பி முதலிய இதயக் கிளைக்கோசைடுகள் உள்ளன. மேலும் பாம்பு நஞ்சை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது. கோழைகட்டு, இருமல், இரைப்பை, மூலம் ஆகிய நோய்களை குணமாக்கும் வல்லமையும் படைத்தது.

கால் ஆணி நோய்க்கு நரி வெங்காயத்தை சுட்டு அவ்விடத்தில் சூட்டோடு மிதித்தால் இந் நோய் நீங்கும். இதை ஆலோசனையின்றி யாரும் உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் நச்சு தன்மையை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்' என்றார்.