Saturday, January 15, 2011

தவளை மற்றும் நண்டின் அற்புதக் கலவை: ஓர் அதிசய உயிரினம்!

தவளை நண்டு என்ற ஓர் அதிசய உயிரினம், தவளை மற்றும் நண்டின் கலப்பு தோற்றத்துடன் காட்சியளிக்கும் தன்மையுடையது. இவை, கேரளாவை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வாழ்ந்து வருகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் வாழும் அரிய வகை உயிரினங்கள் பற்றிய ஆய்வுகளை, மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ந்து செய்து வருகிறது. "சாகர் சம்ப்டா" என்ற ஆராய்ச்சி கப்பலின் உதவியுடன் களம் இறங்கிய ஆராய்ச்சி குழுவினர், கேரள மாநிலம் கொச்சி அருகே அமைந்துள்ள வங்கக்கடலில் தீவிரமாக ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வின்போது, அரிய வகை உயிரினங்களான கத்தி மீன், வவ்வால் மீன், தவளை நண்டு போன்றவை தற்போதும் ஆழ்கடலில் வாழ்ந்து வருகிறது என்பது தெரிய வந்தது. இந்த அற்புத உயிரினங்கள் 116 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரினங்கள், ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், வவ்வால் மீன்களில் 9 வகைகள் உண்டு என்றும், அவற்றில் 4 வகை இந்தியாவில் காணப்படுகிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இவை கடல்பாசி, நுண்ணிய கடல்வாழ் புழுக்கள் மற்றும் சிறிய மீன்களையே அதிகம் உணவாக எடுத்துக் கொள்கிறது. இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், செங்கடல் மற்றும் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா, தைவான், சீனாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகிறது என்றும் வவ்வால் மீன்கள் பற்றி ஆராய்ச்சி குழுவினர் தங்களின் கண்டுபிடிப்பை விளக்கினர்.

கத்தி மீன்களைப் பற்றி அவர்கள் கூறும் போது, இவை மன்னர் வளைகுடா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது என்றும், பவளப்பாறை மற்றும் அதிகமான சேற்றுப் பகுதிகளில் தான் இவை உயிர் வாழ்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

வெள்ளை நிறத்தில் தட்டையாக காணப்படும் இந்த மீன்களை சாப்பிட முடியாது. இவை அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களின் இனத்தைச் சேர்ந்தது. இவை சாதாரண மீன்களைப் போல் நீந்தாமல், செங்குத்தாக நீந்தும் தன்மையுடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கத்தி மீனின் சிறப்புகளை விளக்கி கூறினர்.

மற்றொரு அரிய உயிரினமான தவளை நண்டு பற்றி கூறும் போது, இவை தவளை மற்றும் நண்டின் கலப்புத் தோற்றம் கொண்டது. இவற்றில் 11 வகைகள் உண்டு. இதில் 3 வகை, இந்தியாவிலேயே காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.

இருப்பினும், ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம், பல அரிய மற்றும் அற்புத உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.