Thursday, January 20, 2011

விண்வெளியில் குழந்தை பெற்றால் பூமியில் உள்ள மனித இனத்தில் இருந்து வித்தியாசம் ஏதும் இருக்குமா ? நாசா

விண்வெளி பயணத்தின்போதே செக்ஸ் தொடங்கி குழந்தையை அங்கேயே பெற்றெடுக்க வாய்ப்புள்ளதா? இதுதொடர்பான ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மூளை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பேராசிரியர் ரான் ஜோசப் தலைமையில் சமீபத்தில் இதுபற்றி ஆராய்ச்சி நடத்தினர்.


அதில் தெரியவந்த தகவல்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துகள் ஆகியவை ‘செக்ஸ் ஆன் மார்ஸ்’ என்ற தலைப்பில் வானியல் இதழில் கட்டுரையாக வெளிவந்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: மனிதர்களுக்கு செக்ஸ் உணர்வு இயல்பானது. பூமியில் அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது. மேலும் இதற்கு முக்கியத்துவம் தருவது தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம். பூமியில் செக்சில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் விண்வெளிக்கு சென்றதும் இந்த ஆர்வம் குறையக்கூடும் என்று தெரிகிறது. இதேபோல கருத்தரிப்பதும்கூட விண்வெளியில் குறைந்த அளவே சாத்தியம்.

விண்ணில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் செக்ஸ் உணர்வுகளால் உந்தப்படுவது வாடிக்கை. ஆனால் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி குறித்த விழிப்புணர்வு, பயணத்துக்கு முன்பு பயிற்சியாக அளிக்கப்படுவதால் அத்தகைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மனநிலை அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். மேலும், ஆராய்ச்சி என்ற இலக்கை நோக்கியே அவர்களது செயல்பாடுகள் இருக்கும்.

‘விண்வெளியில் செக்ஸ்’ என்பதையே ஒரு ஆராய்ச்சியாக நடத்தி, இதற்காக ஒரு ஜோடியை விண்வெளிக்கு அனுப்பி செக்ஸ் வைத்துக் கொள்ளச் செய்தால் மட்டுமே இதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், விண்ணிலேயே கருத்தரித்து அங்கேயே குழந்தை பெற்றால் அது ‘பூமி குழந்தையிடம்’ இருந்து வித்தியாசப்படுகிறதா, அதற்கென சிறப்பு குணங்கள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும். பல தலைமுறையாக இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தால் புதிய மனித இனம் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனுடன் தொடர்புபட்ட  வேறு தகவல்கள் --
http://www.newscientist.com/article/mg20927953.400-sex-and-space-travel-dont-mix.html