Monday, January 17, 2011

மாயா நாட்காட்டி பற்றிய தகவல்கள்.

மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது. மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.
சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?
சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.
சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.
அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் விக்கிபீடியாவில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.