பெட்ரோல், டீசல் விலை திடீர் திடீரென்று உயர்கிறது. எல்லா வீட்டு பட்ஜெட்டிலும் மாதாமாதம் துண்டு விழுகிறது. இந்த தொந்தரவுக்கு விடிவு கிடைக்கப்போகிறது. தண்ணீரில் ஓடும் கார் விரைவில் தயாராகும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நானோ தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு பெங்களூரில் நேற்று தொடங்கியது. இன்றும் நடக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமரின் அறிவியல் ஆலோசனை கவுன்சில் தலைவர் சி.என்.ஆர்.ராவ் வந்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள்: அமெரிக்காவின் மசாசூசட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் டேனியல் நோசரா.
அவரும் அவரது ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மேத்யூ கனன் என்பவரும் சேர்ந்து சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக தீவிரமாக ஆய்வு நடத்தினர். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைத்து, இரவு மற்றும் மழை நேரங்களில்கூட பயன்படுத்த முடியும் என்று 2008 ல் கண்டுபிடித்து அறிவித்தனர். சூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக தனித்தனியே பிரிப்பதற்கான முறையையும் உருவாக்கினர்.
இவ்வாறு தனித்தனியே கிடைக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜனை ஒன்றுசேர்த்தால் அதிக மின்சாரம் கிடைக்கும். இதை வைத்து வீடு முழுவதும் விளக்குகளை எரிய வைக்க முடியும் என்றும் கூறினர். கார்பன் எரிக்கப்படாத மின்சாரம் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது.
நோசரா என் நண்பர். இந்த ஆய்வு பற்றி டாடா நிறுவனத்திடம் கூறினேன். கார் ஓட்டுவதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமே என்று யோசனை கூறப்பட்டது. இந்த ஆய்வை தீவிரப்படுத்தி, தண்ணீரில் ஓடும் காரை உருவாக்குவதற்கான பணிகள் மசாசூசட்ஸ் ஆய்வுக்கூடத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. தண்ணீரில் ஓடும் கார் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு ராவ் கூறினார்.